

டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை பரவலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதி களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வேளாங்கண்ணி செபஸ்தியார் நகரில் வடிகால் வசதி இல்லாததால் தெருவில் தண்ணீர் குளம் போல தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
மீனவர் சடலம் ஒதுங்கியது
நாகை துறைமுகத்தில் உள்ள கடுவையாற்று முகத்துவாரத்தில் கடல் சீற்றத்தால் நேற்று முன்தினம் ஃபைபர் படகு கவிழ்ந்ததில் அதில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்களில் 2 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த முருகவேல்(18) என்பவரை 2-வது நாளாக தேடும் பணியில் காரைக் காலில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் நேற்று ஈடுபட் டனர்.
இந்நிலையில், நேற்று மாலை அக்கரைப்பேட்டை கடற்கரை பகுதியில் அவரது சடலம் கரை ஒதுங்கியது. கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் முருகவேலின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கென்னடி(50) என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், சுவர் ஓரத்தில் கட்டியிருந்த 10 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.
கதிராமங்கலத்தை அடுத்த சிற்றிடையாநல்லூர் கிராமத்தில் விவசாயி மாணிக்கம்(70) என்ப வரது ஓட்டு வீட்டின் மீது தென்னை மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. படுகாய மடைந்த மாணிக்கம், அவ ரது மகன் செந்தில்(40) ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர்.
இதேபோல, கும்பகோணத்தை அடுத்த குருகூர் ஆதிதிராவிடத் தெருவைச் சேர்ந்த விவசாயி செல்ல முத்து(40) என்பவரது கூரை வீட்டின் பக்கவாட்டுச் சுவர், கும்ப கோணத்தை அடுத்த கொட்டை யூரில் சிவப்பிரகாசம் என்பவரது கூரை வீட்டின் பக்கவாட்டுச் சுவர் ஆகியன இடிந்து விழுந்தன.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. திருவாரூர் விஜயபுரம் கடைவீதி- வாளவாய்க்கால் பைபாஸ் சாலையை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் மன்னார்குடி குறுவைமொழி கிராமத்தில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இந்த மழை சம்பா பயிருக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அணைக்கரையில் அதிக மழை
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 116.80 மி.மீ. மழை பதிவானது.