

உலக அளவில் வயிற்று புற்றுநோயால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை இரைப்பை குடல் மருத்துவ சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ரேவதி தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் மருத்துவ சிகிச்சைத் துறையின் சார்பில் வயிற்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துறையின் தலைவர் எம்.எஸ்.ரேவதி தலைமையில் வயிற்று (இரைப்பை) புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியில் டீன் சாந்திமலர், ஆர்எம்ஓ ரமேஷ் மற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வயிற்று புற்றுநோய் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது.
டாக்டர் எம்.எஸ்.ரேவதி கூறியதாவது: ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வயிற்று புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வயிற்று புற்றுநோய் அதிகரித்து வருகிறது.
உலக அளவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய்கள் பாதிப்பில் 5-வது இடத்தில் வயிற்று புற்றுநோய் உள்ளது.
இளைஞர்கள் பாதிப்பு
பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏ குரூப் ரத்த வகை கொண்டவர்கள் இந்த புற்றுநோயால் பாதிக்க அதிகம் வாய்ப்புள்ளது. உணவில் அதிக உப்பு, ஊறுகாய் போன்ற அதிக காரம், சுட்டு சாப்பிடும் உணவுகளை சாப்பிடுபவர்கள், உணவு, காய்கறி மற்றும் பழங்களை குறை வாகச் சாப்பிடுபவர்கள், மது மற்றும் சிகரெட் பழக்கம் உடையவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மரபு வழியிலும் இந்த புற்றுநோய் வரக்கூடும். அதனால், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
ஜீரண குறைபாடு, ஏப்பம், வயிறு உப்பசம், நெஞ்சு எரிச்சல், பசியின்மை, எடை குறைதல், ரத்த சோகை, வயிற்று வலி, வாந்தி போன்றவை வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாகும். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். இல்லை யென்றால் மற்ற உறுப்புகளுக்கு புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இவ்வாறு டாக்டர் எம்.எஸ்.ரேவதி தெரிவித்தார்.