Published : 30 Nov 2019 07:30 AM
Last Updated : 30 Nov 2019 07:30 AM

அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு தொல்லியல் சான்றுகளே காரணம்: மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் கருத்து

அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்புக்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகளே முக்கியக் காரணம் என இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அயோத்தி வழக்கில் ராமருக்காக ஆஜரான 93 வயதான மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.குமார், அயோத்தி வழக்கில்
பராசரனுடன் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரசேன், துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்.வைத்தியசுப்பிரமணியன் ஆகியோர் பராசரனைப் பாராட்டிப் பேசினர்.

நிறைவாக பராசரன் பேசியதாவது: அயோத்தி வழக்கில் கடவுள் ராமரின் சார்பில் என்னுடன் 10 வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.வைத்தியநாதன், யோகேஸ்வரன் ஆகியோர் முக்கிய மானவர்கள். வைத்தியநாதனுக்கும் சேர்த்துதான் இந்த பாராட்டு விழா. வழக்கில் வெற்றிக்கு அவர்களின் உழைப்பும் திறமையும் முக்கிய காரணம்.

அயோத்தி வழக்கு சிக்கலானது. உணர்வுப்பூர்வமானது. அயோத்தியில் தான் ராமர் பிறந்தார். அங்கு ஏற்கெனவே கோயில் இருந்தது. முகலாயர் ஆட்சியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு அ்ந்த கட்டுமானத்தின் மீதுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை நாங்கள் நிரூபித்தோம்.

அதற்கு தொல்லியல் ஆய்வுகள் மூலம் கிடைத்த சான்றுகள் மிகவும் துணையாக இருந்தன. ராமர் கோயில் கட்ட 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்ததற்கு தொல்லியல் சான்றுகளே காரணம். அயோத்தி வழக்கில் 14 ஆயிரம் பக்கங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அனைத்து மசூதிகளும் ஒன்றுதான். ஆனால், பிரச்சினைக்குரிய இடம் கோயில் மட்டுமல்ல. ராமர் பிறந்த இடம். எனவே, அதனை இந்துக்கள் புனிதமாகப் பார்க்கிறார்கள். கோயில் இருந்த இடத்தை மாற்றலாம். ஆனால், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது.

ராமர் கோயிலுக்காக நூற்றாண்டுகளாகப் போராடி வருகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினோம். கடவுளின் அருளால் வெற்றி கிடைத்தது. இவ்வாறு பராசரன் பேசினார். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசும்போது, ‘‘அயோத்தி பிரச்சினை இந்து - முஸ்லிம் பிரச்சினை அல்ல.

இது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. கே.கே. முகமது போன்ற தொல்லியல் அறிஞர்கள் கோயில் இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தும் மதச்சார்பின்மை பேசிய இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்கள் அதனை ஏற்க மறுத்து அங்கு ராமர் பிறந்தததற்கான ஆதாரங்கள் இல்லை என்றனர். இதனால் அது அரசியல் பிரச்சினையாக மாறியது. அயோத்தி வழக்கில் ஆஜரான பராசரன், சபரிமலை வழக்கிலும் ஆஜராக வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x