Published : 30 Nov 2019 07:12 AM
Last Updated : 30 Nov 2019 07:12 AM

இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் கண்டுபிடிப்பு: உலக கால்நடை சுகாதார அமைப்புக்கு மத்திய அரசு அறிக்கை 

மதுரை

சுப.ஜனநாயகச்செல்வம்

இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கால்நடைகளுக்கு தோலில் கட்டி, கட்டியாகக் காணப்படும் தோல் கழலை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்த இந் நோய் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு, உலக கால்நடை சுகாதார அமைப்புக்கு கடந்த வாரம் அறிக்கை அளித்துள்ளது.

வெப்ப மண்டலப் பிரதேசங் களில் வாழும் நாட்டு மாடுகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடை யவை. ஆனால் பால் உற்பத்தி குறை வாக இருக்கும். பாலின் தேவை அதிகரிப்பால் வெண்மைப் புரட்சி ஏற்பட்டது. இதில் அதிக பால் உற்பத்தி செய்யும் கலப்பின பசு மாடுகள் இறக்குமதி செய்யப் பட்டன. இவ்வகை பசு மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் கோமாரி நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி, மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடு களில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தோல் கழலை (கட்டி) நோய் தற்போது இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் கண்டறியப் பட்டுள்ளது. கேரள அரசின் கால் நடைத் துறையினர் கண்டறிந்து பகுப்பாய்வு மூலம் இந்நோய் உறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் கால்நடை, பால்வளம், மீ்ன்வளத் துறை அமைச்சகத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துறை செயலாளர் அதுல் சதுர்வேதி தோல் கழலை நோய் குறித்து உலக கால்நடை சுகாதார அமைப்புக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் நோய் புலனாய்வு மையத் தலைவர் எஸ்.சிவசீலன் கூறியதாவது:

கால்நடைகளுக்கு தோல் கட்டி நோயை ஏற்படுத்தும் ‘லம்பி ஸ்கின் வைரஸ்’ 1920-ல் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டது. பின்னர் கென்யா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டது. கடல் மட்டத் துக்கு இணையான பிரதேசங்களில் ஈரப்பதம் அதிகம் இருக்கும்.

இப்பகுதியில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிகரிக்கும். கொசு, ஈக்கள் மூலம் பரவும் இந்நோய் தற்போது இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் தாக்கப்பட்ட மாடுகளின் தோலில் கட்டிகள் நிறைந்து காணப்படும். இதனால் பெரும்பாலும் இறப்புகள் ஏற்படுவதில்லை என்றபோதிலும், வெகுவாகப் பால் உற்பத்தி குறையும். மேலும் சினை பிடிக்காது, தரமான கன்றுகளையும் பிரசவிக்காது.

இந்நோய் இருக்கும் மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும். உடனடியாக அரசு கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலான வைரஸ் நோய்க்கு மருந்துகள் கிடையாது. வைரஸ் நோய்க்கு அடுத்து வரும் பாக்டீரியல் நோயால் இறப்புகள் அதிகரிக்கும்.

இதனால் பாக்டீரியல் நோயை கட்டுப்படுத்த ஊசி மருந்துகளை 3 நாட்களுக்கு செலுத்த வேண்டும். கிருமிநாசினி கொண்ட களிம்பு மருந்துகளை அந்தக் கட்டிகள் மீது தடவ வேண்டும். இந்நோய்க்கு தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து நோய் வரும்முன் செலுத்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x