Published : 29 Nov 2019 04:53 PM
Last Updated : 29 Nov 2019 04:53 PM

அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போயிருக்கின்றன: ஓபிஎஸ் பேச்சு

அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போயிருக்கின்றன என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா இன்று (நவ.29) வேண்பாக்கம் கிராமம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"ஏராளமான நிதி ஒதுக்கீட்டில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள், தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு இன்றைய தினம் தமிழகம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது. தமிழக வரலாறு இதுவரை காணாத வகையில் பிரதமர், சீனப் பிரதமர் சந்திப்பு தமிழகத்தில் மகாபலிபுரத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

அமைதியான, பாதுகாப்பான மாநிலமாக, சட்டம்-ஒழுங்கு அமைதி சிறப்பாகப் பேணப்படுகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பிற மாநிலங்களைவிட சிறப்பாகச் செயல்படும் மாநிலம் தமிழகம் என்று மத்திய அரசு பாராட்டுகிறது.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்துகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடமிருந்து சமீபத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, இரண்டு தினங்களுக்கு முன்பு மேலும் மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஒரே வருடத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியைப் பெற்ற ஒரு வரலாற்று சாதனையை தமிழக அரசு நிகழ்த்தியுள்ளது.

இந்த அளவுக்கு, துறைகள்தோறும் எண்ணிலடங்கா சாதனைகளை தமிழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இச்சாதனைகளைக் கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ந்து போயிருக்கின்றன. வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தங்களது கட்சியின் வெற்றி வாய்ப்புக்கள் பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மறுபடியும் நீதிமன்றத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிவைப்பதற்கு மறைமுகமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக விரைவில் நடைபெறும். தமிழக மக்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்"

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x