நெல்லையில் விற்பனைக்கு குவிந்த விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள்: சந்தையை ஆக்கிரமித்த சீன தயாரிப்புகள்

நெல்லையில் விற்பனைக்கு குவிந்த விதவிதமான கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள்: சந்தையை ஆக்கிரமித்த சீன தயாரிப்புகள்
Updated on
2 min read

பாளையங்கோட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் களைகட்ட வைக்கும் வகையில் இவ்வாண்டு சீன நாட்டிலிருந்தும், கேரள மாநிலம் கொல்லத்திலிருந்தும் புதுவிதமான அலங்கார பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 25 நாள்களே இருக்கும் நிலையில் அதற்கான தயாரிப்புப் பணிகளை தற்போதே கிறிஸ்தவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

இதனால் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை பல இடங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

பாளையங்கோட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தற்போது வண்ணமயமாய் ஜொலிக்கின்றன.

பல்வேறு வண்ணமயமான ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.

கொண்டாட்டங்களுக்காக கிறிஸ்தவ தேவாலயங்களை சுத்தப்படுத்தி தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவாலயங்கள், கிறிஸ்துவர்களின் இல்லங்கள் வண்ணமயமாய் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதற்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கும் பணிகளையும் கிறிஸ்தவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாகவே கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையை வெளிநாட்டு தயாரிப்புகள் ஆக்கிரமித்து வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டும் குடில்கள், ஸ்டார்கள், செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள், குடில் சொரூபங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கான பொருள்கள், கிறிஸ்துமஸ் மரங்களில் தொங்கவிடும் விதவிதமான மணிகள், கண்கவர் அலங்கார பொருள்கள், ஜரிகைகள் என்று அனைத்திலும் வெளிநாட்டுத் தயாரிப்புகள் காணப்படுகின்றன.

பெரும்பாலான பொருட்கள் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்தும், அருகிலுள்ள கேரள மாநிலத்தின் கொல்லத்திலிருந்தும் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், குடில் செட்டுகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.

பாளையங்கோட்டையில் கதீட்ரல் பேராலயம் அருகிலுள்ள சிஎஸ்ஐ டயசீஸின் டெப்போ விற்பனை நிலையத்தில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விதவிதமாக குவிக்கப்பட்டிருக்கின்றன.

பல ஸ்டார்களும், கிறிஸ்துமஸ் மரங்களும், குடில் செட்டுகளும், அலங்கார விளக்குகள், மணிகள், செயற்கை புல்வெளி, தகதகவென மின்னும் ஜரிகைகளால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருள்களும் மிகவும் நேர்த்தியாகவும், பார்வைக்கு அழகாகவும், தரமாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யபட்டு சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களும் உயரத்துக்கும், மெட்டீரியலுக்கும் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக இந்த விற்பனை நிலைய மேலாளர் மோகன்ராஜ், கணக்கர் எஸ். ஜெபர்சன் ஆகியோர் கூறியதாவது:

இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக காகிதம், பிளாஸ்டிக், பைபபர், வெல்வெட் துணிகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்டுள்ள விதவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ரூ.65 முதல் ரூ.560 வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

3 டி மற்றும் வெல்வெட் ஸ்டார்கள் ரூ.180 முதல் ரூ.325 வரையும், பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் உடைகள் ரூ.650 முதல் ரூ.2500 வரையும், பிளாஸ்டர் ஆஃப் பாரிசால் உருவாக்கப்பட்ட குடில் சொரூபங்கள் அடங்கிய செட் ரூ.300 முதல் ரூ.6 ஆயிரம் வரையிலும் விற்பனைக்கு வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அவற்றின் உயரம், பயன்படுத்தியுள்ள பொருட்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓரடி உயரமுள்ள மரம் ரூ.30க்கு கிடைக்கும். இங்கு 10 அடி உயரமுள்ள செயற்கையான செர்ரி பழங்கள் தொங்கவிடப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது.

பனிபடர்ந்ததுபோன்ற கிறிஸ்துமஸ் மரங்கள், முற்றிலும் வெள்ளை நிற மரங்கள், இலைகளின் நுனியில் விளக்குகள் ஒளிரும் வகையிலான மரங்கள் என்று வெவ்வேறு விதமான மரங்கள் 1 அடியிலிருந்து 15 அடி உயரம் வரையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

வெல்வெட் ஸ்டார்கள், 3 டி ஸ்டார்கள் போன்றவை புதிய வரவுகள்.பேப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றாலான 40 வகையான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.

அலங்காரப் பொருட்களின் தரம், தன்மை, அளவு, இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றை பொருத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் பாளையங்கோட்டையில் ஒருசில கடைகளிலும், திருநெல்வேலி டவுனிலுள்ள பல்வேறு கடைகளிலும் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும்போது அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டும் என்று விற்பனையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in