

உள்ளாட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு மூன்றாண்டுகளாக நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. இது அரசியலமைப்பு சட்ட அத்துமீறலாகும்.
இதுதொடர்பான முறையீடுகளை விசாரித்த உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளன. இவைகளும் மதிக்கப்படவில்லை. இவைகள் அனைத்தும் சட்ட நெருக்கடியாக முற்றியுள்ள சூழலில், தமிழ்நாடு அரசு அரைகுறை மனதுடன் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்புகளை தொடங்கியுள்ளது. அரசின் அணுகுமுறை வெளிப்படையற்ற, மர்மங்கள் உள்ளடங்கிய முறையில் அமைந்திருக்கிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி தொடர்கிறது.
திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தற்போது 9 மாவட்டங்களாக பிரித்தமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகளுக்கான மாவட்ட ஊராட்சி, ஒன்றிய ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் எல்லைகள் வரையறுப்பு செய்யப்படவில்லை. பழைய நிலையில் தேர்தல் நடந்தால், புதிய மாவட்ட அமைப்புகளில் உள்ள வார்டுகள் மற்றும் தலைவர்கள் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறைகள் எப்படி அமையும் என்பதில் முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன.
இந்த நிலையில் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவற்கான அறிவிக்கை டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நவம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய மாவடங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை வரையறுத்து, தேர்வு செய்யப்படும் வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகிய தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு செய்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவு செய்து, உள்ளாட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.