

ப. சிதம்பரம் எதேச்சதிகார தாக்குதலினால் மனம் சோர்ந்து விட மாட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பு வகித்த போது மே 2007 ஆம் ஆண்டில், ஐஎன்எக்ஸ் ஊடக நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்கு வழங்கிய ஒப்புதல் குறித்து 10 ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், இதற்கான அனுமதியை பொருளாதார விவகார செயலாளர் தலைமையில் 6 செயலாளர்களைக் கொண்ட அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தான் வழங்கியது. அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் சாதாரண நடைமுறையின் கீழ் ஒப்புதல் மட்டுமே வழங்கியுள்ளார்.
ஏற்கெனவே, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் வழங்கியதைத் தவிர, இதில் இவருக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால், மத்திய அரசின் மீது நாள்தோறும் கடுமையான விமர்சனக் கணைகளை தொடுத்து வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பொய் வழக்கு போட்டு நூறு நாட்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 25 ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்து 9 நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று நாட்டு மக்களிடையே நிலவிய வறுமையை விரட்டுவதற்குக் கடுமையான பணிகளை மேற்கொண்டவர் ப. சிதம்பரம்.
இவரைப் போலவே பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டிசில்வா 580 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். 74 வயதான தொழிலாளர் கட்சியின் தலைவரான அவரை விடுதலை செய்ய வேண்டுமென பிரேசில் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் எல்லோரும் குரல் கொடுத்தனர்.
அவர் பிரேசில் நாட்டின் அதிபராக 2003 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் பதவியில் இருந்தார். பதவியில் இருந்து விலகிய பிறகு, 2018 ஆம் ஆண்டு ஊழல் புகாரில் அவருக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தவர்களால் பழிவாங்கும் நோக்கத்தோடு சிறையில் அடைக்கப்பட்டார். சித்திரவதை செய்யப்பட்டார். லுலாவுக்கு எதிராக ஆதாராமில்லாத வழக்குகள் ஜோடிக்கப்பட்டதை அந்நாட்டின் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. அவை நீதிமன்றத்தின் போக்கைக் கடுமையாக விமர்சனம் செய்தன.
அவரது விடுதலையின் மூலமாக தென் அமெரிக்க நாட்டில் உள்ள இடதுசாரிகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. லுலா ஆட்சியின் போதுதான் 3 கோடியே 60 லட்சம் ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டனர் என்ற பாராட்டு கிடைத்தது. பிரேசில் முன்னாள் அதிபர் லுலாவையும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் இன்றையச் சூழலில் ஒப்பிடுவது மிகவும் பொறுத்தமானதாகும்.
ப. சிதம்பரம் சிறையில் 100 நாட்களைக் கழித்திருக்கிறார். ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இரண்டு விதமான விசாரணை அமைப்புகள். மத்திய புலனாய்வுத்துறை தொடர்ந்த வழக்கில் விடுதலை கிடைத்ததும், அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சம்நீதிமன்றத்தின் ஆணைக்காக காத்திருக்கிறார்.
நீதிமன்ற நடைமுறைகளை பயன்படுத்தி விசாரணை என்ற போர்வையில் எவரையும் 100 நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம் என்கிற பழிவாங்கும் போக்கை கையாள்வதில் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் கிடைக்க வேண்டிய தீர்வுகள் காலம் தாழ்ந்து கிடைப்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும்.
மத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணியை எதிர்த்து ப. சிதம்பரம் செய்து வரும் கடுமையான விமர்சனங்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் இத்தகைய பழிவாங்கும் போக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலமாக ப. சிதம்பரத்தின் குரலை ஒடுக்கி விடலாம், உடல் ரீதியாக, மனரீதியாக அவரை சீர்குலைத்து விடலாம் என்று பாஜக ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார்கள். இவரது வழக்கில் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய அனைத்து நிலைகளிலும் பாஜக அரசு சார்பாக வாதாடுபவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த நிலையிலும் ப. சிதம்பரத்தை விடுதலை செய்யக் கூடாது, தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் பாஜக அரசின் எந்திரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
மலேகான் குண்டு வெடிப்பில் பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாகூர் போபால் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடியின் ஆசியோடு நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார்.
மிகப்பெரிய பயங்கரவாத குற்றத்தில் சம்மந்தப்பட்ட ஒருவரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்து வகுப்புவாத அரசியல் நடத்துபவர் நரேந்திர மோடி இதற்கு உடந்தையாக இருப்பவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இத்தகைய போக்கு கொண்டவர்களின் ஆட்சியில் ப. சிதம்பரம் போன்ற நேர்மையாளர்களுக்கு அவ்வளவு சுலபமாக நீதி கிடைக்காது.
சமீபத்தில், நீதிமன்ற விசாரணைக்கு ப. சிதம்பரம் வந்த போது அவரது முகத்தில் எந்தவிதமான சோர்வும் இல்லாமல் மிகவும் மனஉறுதியோடு இருக்கிறார் என்று அவரை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சிறைச் சாலைகளை துணிவுடன் எதிர்கொண்ட காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், இத்தகைய எதேச்சதிகார தாக்குதலினால் மனம் சோர்ந்து விட மாட்டார். விரைவில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்.
ஆனால், இதுவரை விசாரணை என்ற போர்வையில் எந்தவித ஆதாரத்தையும் திரட்ட முடியாமல் 100 நாட்கள் ப. சிதம்பரத்தை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு நாட்டு மக்களுக்கு பாஜக ஆட்சியாளர்கள் உரிய பதிலைக் கூறாமல் தப்ப முடியாது.
எனவே, ஜனநாயகத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கையுள்ளவர்கள் ப. சிதம்பரத்தின் விடுதலையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். அவரை விரைவாக விடுதலை செய்வதே மக்களின் எதிர்பார்ப்பாகும்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.