

கடலோரத்தை ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட அனேக மாவட்டங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
“தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகக் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும் நாளை மற்றும் மறுநாள் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், தஞ்சை மாவட்டம் கீழ்பகுதியில் 12 செ.மீ மழையும், அரியலூர் மாவட்டங்களில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது
சூறாவளி காற்று வீசுவதால் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல், நாளை தென்மேற்கு வங்கக் கடல் குமரிக்கடல் மற்றும் மாலத் தீவு பகுதிகளுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.