Published : 29 Nov 2019 10:47 AM
Last Updated : 29 Nov 2019 10:47 AM

பிரதமர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்யாதீர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சொன்ன வைகோ

வைகோ: கோப்புப்படம்

புதுடெல்லி

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாத காலமாக வெளிநாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில், நேற்று (நவ.28), வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அறிக்கை வாசித்தார்.

அந்த அறிக்கை குறித்து வைகோ கேட்ட விளக்கம்:

"ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து, மன்மோகன்சிங் காலம் வரையிலும், பிரதமர் வெளிநாடுகள் சென்று வந்தால், அதுகுறித்து, அவரே மாநிலங்களவைக்கு வந்து விளக்கம் அளிப்பார். உறுப்பினர்கள் அதன்மீது விளக்கம் கேட்பார்கள். இதுதான் இத்தனை ஆண்டுக்காலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை ஆகும்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி உலகம் சுற்றி வருகின்றார். பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோரோடு பேசுகிறார். மகிழ்ச்சி. ஆனால், அதுகுறித்து அவர் இந்த அவைக்கு வந்து விளக்கம் அளிக்காதது ஏன்? வெளிநாட்டுத் தலைவர்களோடு நான் என்ன பேசினேன்? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன என்பதை, அவர் இந்த அவைக்கு வந்து தெரிவிக்காதது ஏன்?

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அத்துறையில் பாண்டித்யம் பெற்றவர்தான். ஆனால், பிரதமர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யக் கூடாது. ஜெய்சங்கர் பிரதமரானால், அவர் வாசிக்கலாம்.

வெளிவிவகாரத்துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்றார். லட்சக்கணக்கான தமிழர்களைக் கோரமான இனப்படுகொலை செய்தவர் கைகளில் பூங்கொத்து கொடுக்கச் சென்றீர்களா?

அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகளும் தப்பவில்லை. சிங்களவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் நான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் தமிழர் வாழும் தெருக்களில் சுற்றி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஈழத்தமிழ் இனப்படுகொலையால், கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயும், கோபத் தீயும் பற்றி எரிகின்றது. அப்படி எரிகின்ற நெருப்பில், நீங்கள் இப்போது பெட்ரோலை ஊற்றி இருக்கின்றீர்கள்" என வைகோ பேசினார்.

அப்போது, "இப்படி நீங்கள் பேசக்கூடாது" என சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து சபாநாயகருக்கும் வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

"நான் இலங்கைக்குச் சென்று அதிபரைச் சந்தித்தது குறித்து வைகோ கேட்கின்றார். நான் மொத்த இலங்கைக்கும்தான் அதிபர் என்று அவர் கூறி இருக்கின்றார். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருதித்தான் நாங்கள் செயல்படுவோம். நான் அவருக்கு அழைப்பு கொடுத்தேன்" என வைகோ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x