கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் கைதான மனோகரனை தூக்கிலிட இடைக்காலத் தடை: கருணை மனுவுக்கு அவகாசம் கோரியதால் விசாரணை தள்ளிவைப்பு
ஆளுநருக்கு கருணை மனு அளிக்க அவகாசம் கோரியதால் கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் கைதான மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள் ளது.
கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு முஸ்கான் என்ற சிறுமியும், ரித்திக் என்ற சிறுவனும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளி வாகன ஓட்டுநரான மோகன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளியான மனோகரன் கைது செய்யப்பட்டனர். இதில் மோகன்ராஜ் கடந்த 2010 நவம்பரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மனோகரனுக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து கடந்த 2012-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில் மனோ கரனுக்கான தூக்கு தண்டனையை வரும் டிச.2 அன்று நிறைவேற்ற கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீராய்வு மனு தள்ளுபடி
இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உத்தரவின் நகல் கடந்த 13-ம் தேதிதான் கிடைத்தது.
தற்போது இந்த தூக்கு தண் டனையை ரத்து செய்யக்கோரி ஆளுநருக்கு கருணை மனு அளிக்க 6 வாரம் அவகாசம் தேவை. இந்த சூழலில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, தூக்கு தண்டனைக் கைதியான மனோகரனை தூக்கிலிட இடைக் கால தடை விதித்தும், இது தொடர்பாக அரசு தரப்பில் 4 வாரங்களில் பதில் அளிக் கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
