

காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் பெரிய மாவட்ட மாக காஞ்சிபுரம் இருந்து வந்தது. 4393.37 சதுர கி.மீ பரப்பளவுள்ள இம்மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 39.99 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 4 வருவாய் கோட்டங்கள், 11 வட்டங்கள், 9 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 633 ஊராட்சிகள் மற்றும் 1,137 கிராமங்களைக் கொண்டு பெரிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்தது.
இந்நிலையில் செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் வசிப்போர் அடிப்படை தேவைகள், அரசின் நலத்திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக ஆட்சியர் அலுவல கத்துக்கு காஞ்சிபுரம் செல்ல குறைந்தது 100 கி.மீ பயணிக்க வேண்டியிருந்தது.
இந்த காரணத்தால் காஞ்சி புரத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதையடுத்து காஞ்சி மாவட் டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இன்று தொடக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் தொடக்க விழா செங்கல்பட்டு அருகே வேண்பாக்கம் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று பகல் 12.15 மணிக்கு நடைபெறுகிறது. இதில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார்.
இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக ஜான் லூயிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலராக பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்டமாக செங்கல் பட்டு தொடங்கப்படுவது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாவட்டத்தின் வளர்ச்சிக்காக வும், மக்களுக்கு அடிப்படை வசதி கள் உடனடியாக கிடைக்கவும், செங்கல்பட்டு நகராட்சியுடன் சுற் றுப்பகுதி கிராமங்களை இணைக்க வேண்டும். மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை, பேரூராட்சிகளாகவும், பேரூராட்சி களை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த வேண்டும்.
பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து வட, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் செங்கல்பட்டில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.