

பாதாள சாக்கடையில் சிறுவன் இறங்கி சுத்தம் செய்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சி 109-வது வார்டுக்கு உட்பட்ட நெல்சன் மாணிக்கம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, 15 வயதுக்கு உட்பட்ட சிறுவன் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இந்த செய்திகளின் அடிப் படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர், சென்னை குடிநீர் வாரிய கண்காணிப்பு பொறியாளர் மற்றும் 9-வது மண்டல செயல் பொறியாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.