

ஒடிசாவில் மாவோயிஸ்ட் சுட்டதில் மரணமடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் அடக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று ராணுவ மரியாதையுடன் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள முழுக் கோடு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மகன் அபிலாஷ்(27). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். ஒடிசாவில் நேற்றுமுன் தினம் படை பிரிவினர்களுடன் அபிலாஷ், மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டைக்கு சென்றார். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் அபிலாஷ் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட அபிலாஷின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இறந்த அபிலாஷின் உடல் ஒடிசாவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. இன்று காலை முழுக்கோட்டில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அபிலாஷுக்கு சுஜித்திர குமாரி என்ற மனைவியும், வைகா(2) என்ற மகளும் உள்ளனர்.
கிருஷ்ணகிரி வீரரும் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங் கல் அருகே உள்ள திம்மேநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந் திரன் (44). எல்லை பாதுகாப்புப் படையின் 104-வது படைப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் ஜன்பாய் முகாமில் பணியில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் கள் நடத்திய தாக்குதலில் எல் லைப் பாதுகாப்பு படை வீரர் ரவிச் சந்திரனும் வீரமரணம் அடைந்தார்.
தாக்குதலில் பலியான ரவிச்சந்திரனின் பெற்றோர் மன்னார் குப்பம்மாள். கடந்த 1973-ம் ஆண்டு பிறந்த ரவிச்சந்திரன் பிளஸ் 2 வரை படித்துள்ளார். கடந்த 1993-ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவருக்கு யசோதா (35) என்ற மனைவியும், பூஜா (16), ரூபாவதி (14) என இரு மகள்களும், ஜெயச்சந்திரன் (9) என்ற மகனும் உள்ளனர். இவரது உடன் பிறந்த 5 பேரில், சிவசண்முகம் என்பவரும் எல்லைப் பாதுகாப்பு படையில் தற்போது ஒடிசாவில் பணிபுரிந்து வருகிறார். மற்றவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
ரவிச்சந்திரன் கடந்த 2 மாதங் களுக்கு முன்பு 15 நாட்கள் விடுமுறையில் வந்து சென்றுள்ளார். அவர் உயிரிழந்தது குறித்த தகவல் நேற்று காலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிந்தது. இதனால் திம்மநத்தம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மணிவண்ணன் கூறும்போது, ரவிச்சந்திரன் உடல் பெங்களூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து திம்மேநத்தம் கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என்றார்.
தலா ரூ.10 லட்சம்: முதல்வர் உத்தரவு
சென்னை
ஒடிசாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதையடுத்து அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2 தமிழக வீரர்கள் இறந்த செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்