

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல் பயிரை காப்பீடு செய்ய நவ.30 (நாளை மறுநாளே) கடைசி என்ற நிலையில் ‘சர்வர்’ முடங்கியதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்படுகின்றன. அவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், பொது சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.
தற்போது மாநிலம் முழுவதும் நெல் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் நகல், ஆதார் எண், 10(1) நகல் மற்றும் பிரிமீயமாக ரூ.390 செலுத்தி விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல் பயிரை காப்பீடு செய்ய நவ.30-ம் தேதி கடைசி நாள் என்பதால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், பொது சேவை மையங்களில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் பதிவு செய்வதால் அடிக்கடி ‘சர்வர்’ முடங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதையடுத்து காப்பீடு பதிவை மேலும் ஒரு வாரத்திற்காவது நீட்டிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுசேவை மைய ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘ மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் பயிர் காப்பீடு செய்வதால் ‘சர்வர்’ மிகவும் மெதுவாக இயங்குகிறது. சிலசமயங்களில் அப்படியே முடங்கி விடுகிறது. இதனால் ஒருவருக்கு பதிவு செய்யவே அரை மணி நேரத்திற்கு மேலாகிறது.
மேலும் கிராம நிர்வாக அலுவலர்களும் அவசர, அவசரமாக அடங்கல் கொடுப்பதால், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன. சில அடங்கலில் பட்டா எண் தவறாக உள்ளது. சிலவற்றில் உட்பிரிவுகளை குறிப்பிடவில்லை. மேலும் நிலத்தின் பரப்பும் தவறாக உள்ளன. இதனால் அவற்றை பதிவு செய்ய முடியவில்லை, என்றனர்.