Published : 28 Nov 2019 06:04 PM
Last Updated : 28 Nov 2019 06:04 PM

பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு; இயக்குநர் பாக்யராஜ் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு அவர்களும் ஒரு காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியதற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் தரமான, சிறப்பான பல திரைக்கதைகளை உருவாக்கியவர். ஆனாலும் முருங்கைக்காய் நகைச்சுவையில்தான் அதிகம் பேசப்பட்டார். இந்தியாவிலேயே சிறந்த கதாசிரியர் விருதுபெற்றவர். ஆனால் சமீபத்தில் அவர் திரைப்பட விழா ஒன்றில் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.

பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஆந்திர மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக மகளிர் ஆணையத்துக்கும் நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் சுதேசி பெண்கள் அமைப்பு சார்பில் பாக்யராஜ் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அவ்வமைப்பின் நிறுவனத் தலைவர் கலைச்செல்வி புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

“சமீபகாலமாக சில திரைத்துறை கலைஞர்களின் படைப்புகளால் மக்களின் மனம் மாசடைந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என பல்வேறு சமூக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக நலன் கருதி விழிப்புணர்வுக் கருத்துகளை கொடுத்து வரும் பலர் இருக்கும் திரைத்துறையில் மது, போதை, புகை பிடித்தல், ஆபாசம், வன்முறை என சமூக விரோதக் காட்சிகளைக் கொடுக்கும் சிலரும் உள்ளனர்.

இதனால் சமூகத்தில் சாதி, மத மோதல்கள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஆண், பெண் வித்தியாசமின்றி மக்கள் ஈடுபட்டு தங்களது வாழ்வைச் சீரழித்துக் கொள்கின்றனர். இந்நிலையில் சமூகத்தில் நிகழும் மாற்றுக் காதல் மற்றும் பாலியல் குற்றங்கள் அதனைச் சார்ந்த கொலைகள் ஆகியவற்றுக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போல, ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என்றும், ஆண்கள் தப்பு செய்தாலும் சின்னவீடு வைத்துக் கொண்டாலும் அதனால் யாருக்கும் தொந்தரவுகள் வராது. பெண்கள் தப்பு செய்தால் அது பெரிய பிரச்சினையாகி விடும். எனவே பெண்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம் எனவும், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கு பெண்களே காரணம் எனவும் பெண்களை ஒட்டுமொத்தமாக குற்றவாளிகள் போலவும், ஒழுக்கம் கெட்டவர்கள் போல இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார்.

கடந்த 25-ம் தேதி மாலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த, ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் தரக்குறைவாகப் பேசியுள்ளார் .

அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “ஊசி இடம் தராமல் நூல் நுழையாது. பெண்கள் இடம் கொடுப்பதால் தான் தப்பு நடப்பதற்கு வழி வகுக்கிறது. பெண்கள் உஷாராக இருந்தால் நல்லது. ஆண்களை மட்டுமே தப்பு சொல்வது தவறு. ஆண் தவறு செய்தால் போகிற போக்கில் போய் விட்டு வந்து விடுவார். ஆனால் பெண் தவறு செய்தால் மிகப்பெரிய தவறுக்கு வழி வகுத்து விடுகிறது.

இதைத்தான் நாளிதழ்களில் தினமும் பார்க்கிறோம்.ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொண்டால் எப்படியாவது உழைத்து சம்பாதித்த வீட்டுக்குத் தேவையானதை செய்து விடுவான். அதே வேலையில் பெரிய வீட்டையும் தொந்தரவு செய்ய மாட்டான்.

இதையே நாளிதழில் பாருங்கள்... கள்ளக் காதலுக்காக கணவன் குழந்தைகளைக் கொன்று விட்டார் என பெண்கள் பற்றிய செய்திகள் வருகின்றன, பெண்கள் சுய கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். இன்று மொபைல் போன் வளர்ச்சியால் பெண்கள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தவறும் சுலபமாக நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்காக ஆண்கள் மட்டுமே காரணமல்ல. பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆண்கள் செய்தது தப்பு என்றால் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது பெண்கள்தான்” என்று பாக்யராஜ் பேசியுள்ளார் .

வயது வித்தியாசமின்றி பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகி வரும் சூழலில், இவரது ஆணாதிக்க எண்ணம் கொண்ட பேச்சு பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்களைப் போன்ற பெண்களின் மனதைக் காயப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

எனவே ஒட்டுமொத்தப் பெண்களின் கவுரவத்தை இழிவு செய்யும் விதமாக பேசியுள்ள திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் சங்கத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x