

மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டார். சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்காக போலீஸாரால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அப்போது, பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கோரி அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான நபர்களை படம் பிடிக்கக் கூடாது என்றும் இவ்வழக்கு தொடர்பான செய்திகளை பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த ஊடகங்கள் மூலமும் வெளியிடக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அளித்த பேட்டியில், "பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான செய்திகள் வருவது அரசுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதில் மனுவும் தாக்கல் செய்ய உள்ளோம். இது சாதாரண வழக்கு இல்லை. உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்க பேராசிரியை நிர்மலாதேவியை அரட்டி, மிரட்டி அவரோடு இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம்.
தீவிரவாதிகள், 4 கொலை செய்தவர்கள், தேசதுரோகம் செய்தவர்கள் தலைமறைவாக உள்ளார்கள். ஆனால், பேராசிரியை நிர்மலாதேவிக்கு திட்டமிட்டு வாயிதா கொடுக்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தொந்தரவு செய்யக்கூடிய அமைச்சர் குறித்து எழுத்துப் பூர்வமாக பேராசிரியை நிர்மலாதேவியிடம் கேட்டுள்ளேன்.
அவர் எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்திற்கு புகார் அளிக்க வந்தபோதுதான் அதை தெரிந்துகொண்டு போலீஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
சிறையில் பேராசிரியை நிர்மலாதேவியை யாரையும் சந்திக்க விடுவதில்லை. சிறைக்குள்ளேயே பேராசிரியை நிர்மலாதேவியை வைத்து தண்டனை அனுபவித்து முடிக்க திட்டமிடப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பெரும்புள்ளிகளை தப்பிக்க வைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்குப் பின்னணியில் நிறைய விஷயங்கள் உள்ளன.
நிர்மலா தேவியை கடந்த 3 நாட்களாக சிறையில் குளியல் அறையில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். சிபிசிஐடி போலீஸார் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவிகளை வீட்டிற்கு சென்று மிரட்டுகின்றனர்.
அமைச்சர் பெயரைக் கூறி பேராசிரியை நிர்மலாதேவிக்கு மிரட்டல் தொடர்கிறது. நெருக்கடி கால நிலையைப் போல இந்த வழக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தீர்ப்பு ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டு இந்த வழக்கு செல்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
நேற்று மாலை மதுரை மத்திய சிறையில் உள்ள நிர்மலாதேவியிடம் கவர்னர் மாளிகையில் இருந்து வருகிறேன் என ஒருவர் சென்று சந்தித்து வழக்கறிஞரை மாற்று என அவரை மிரட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செல்லத்துரைக்கு சம்பந்தம் இருப்பதால்தான் அவரை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்" என்றார்.