Published : 28 Nov 2019 04:41 PM
Last Updated : 28 Nov 2019 04:41 PM

'உள்ளாட்சித் தேர்தல்' அனைத்துக் கட்சிக் கூட்டம்; விவி பேட், சிசிடிவி வேண்டும்: அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும், விவிபேட், சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு குறித்தும் தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் டிசம்பர் 2-ம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் இறுதியில் தேர்தல், இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆய்வுக்கூட்டம் நடத்தி முடித்துவிட்டார். இந்நிலையில் இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தலைக் கட்டாயம் நடத்துவோம், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய முறையில்தான் தேர்தல் நடக்கும் என தெரிவித்த ஆணைய அதிகாரிகள் தேர்தலை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்த ஆலோசனை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

வாக்குப் பதிவு இயந்திரத்துடன் விவிபேட் மூலம் தேர்தல் நடத்த வேண்டும், மேயர், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வர வேண்டும், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்து வரையறுக்கப்பட்ட பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கட்சிப் பிரதிநிதிகள் பொதுவாக வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், பாபு முருகவேல், திமுக சார்பில் - கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ. காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுந்தரராஜன், உதயகுமார், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், பாஜக சார்பில் ஜெய்சங்கர், குமரகுரு, இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வசந்தகுமார், ஏழுமலை, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி, அபுபக்கர், பகுஜன் சமாஜ் சார்பில் அடைக்கல்ராஜ், ஷ்யாம், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கட்சிப் பிரதிநிதிகள் பேசினர்.

அதிமுக - பொள்ளாச்சி ஜெயராமன்:

அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தோம். உள்ளாட்சித் தேர்தல் தடைப்படாத வகையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

எதிர்க்கட்சி தடை வாங்காமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தேர்தல் எத்தனைக் கட்டங்களாக நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். பிரிக்கப்படாத போது மாவட்டங்களில் எவ்வாறு உள்ளாட்சி அமைப்புகள் இருந்ததோ தற்போது பிரித்த மாவட்டங்களில் அதேபோல் உள்ளாட்சி நடத்தப்படும்.

திமுக - என்.ஆர்.இளங்கோ:

தேர்தலை முறையாக நடத்துவது குறித்து ஒவ்வொரு கோட்டங்களிலும் மத்திய அரசு அதிகாரியைப் பார்வையாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். மேலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அனைத்துப் பதவிகளுக்கும் இவிஎம் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வேட்பாளர் பெயரை வாக்குச்சீட்டில் அச்சிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

திமுக - கிரிராஜன்:

கிராமப் பஞ்சாயத்து வரை வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இட ஒதுக்கீட்டை முறையாக தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. ஒருமித்த கருத்தாக இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தோம். இதை முறையாகச் செயல்படுத்திய பின் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் விவி பேட் பயன்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

காங்கிரஸ் - தாமோதரன்:

சுதந்திரமாகவும் ஜனநாயக முறையிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். விவி பேட் பயன்படுத்த வேண்டும் என்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.

தேமுதிக -அழகாபுரம் மோகன்ராஜ்:

புதிய மாவட்டத்திற்கும் பழைய முறையில்தான் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்கள். தேர்தல் நிச்சயம் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆணையர் உத்தரவாதம் அளித்துள்ளார். ஒரு கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தார்கள். எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இவ்வாறு கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x