

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 கொலை வழக்கில் 13 பேர் விடுதலையை எதிர்த்து மேலும் ஒரு வழக்கு இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த பால சந்திரபோஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மேலவளவு முருகேசன் உட்பட 6 பேர் கொலையான வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் 13 பேர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.
அந்த வழிகாட்டுதல்களை 13 பேரை விடுவிக்கும் போது தமிழக அரசு பின்பற்றவில்லை. இதனால் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை 13 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை ஏற்கெனவே விசாரித்து வரும் உயர் நீதிமன்ற கிளையின் 2-வது அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மூத்த வழக்கறிஞர் ரத்தினம் தாக்கல் செய்த மனுவில் முன்விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் மேலவளவில் நுழைய தடை விதித்தும், வழக்கு முடியும் வரை வேலூரில் தங்கியிருக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை 2-வது அமர்வு நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.