Published : 28 Nov 2019 03:32 PM
Last Updated : 28 Nov 2019 03:32 PM

தமிழில் ஐஐடி நுழைவுத் தேர்வுகள்; பாமகவின் 20 வருட முயற்சிக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

தமிழில் ஐஐடி நுழைவுத் தேர்வுகள் நடத்த முன்வந்திருப்பது பாமக முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.28?) வெளியிட்ட அறிக்கையில், "ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகளின் முதன்மைத் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. 2021 ஆம் ஜனவரி தேர்தல் முதல் தமிழ்வழித் தேர்வு நடைமுறைக்கு வருகிறது.

ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், நீட் தேர்வுகளைப் போலவே முக்கிய மாநில மொழிகளிலும் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இந்தநிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வுகளை தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, வங்க மொழி, ஒடியா, அஸ்ஸாமி, மராத்தி 8 மாநில மொழிகளிலும் நடத்த ஏற்பாடு செய்யும்படி இத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. இந்த மொழிகளையும் சேர்த்து 10 மாநில மொழிகள், ஆங்கிலம் என மொத்தம் 11 மொழிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இத்தேர்வுகளுக்கான வினாத்தாள்களை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பது, விடைத்தாள்களைத் திருத்துவது போன்றவற்றுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கால அவகாசம் தேவை என்பதால், மாநில மொழிகளிலான ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வு வரும் ஆண்டில் நடத்தப்படாது; 2021 ஜனவரியில் நடத்தப்படும் தேர்வில் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடக்கப்பட்ட நாளில் இருந்தே அவற்றில் சேரும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று நுழைவுத்தேர்வுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுவதுதான்.

இந்தத் தடையை நீக்கி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஐஐடிக்களில் சேருவதற்கு வசதியாக ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வை தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த வழக்கு இப்போதும் விசாரணையில் இருந்து வருகிறது.

ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் என்று வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த, செய்து கொண்டிருக்கும் பிரதமர்களிடம் பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 8 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூட இந்தக் கோரிக்கையை நான் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், இதற்கு முன் இந்தத் தேர்வை நடத்தி வந்த சிபிஎஸ்இ இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட நிலையில், இப்போது இத்தேர்வை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள தேசிய தேர்வு முகமை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வை நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஐஐடி நுழைவுத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படவிருப்பது 20 ஆண்டுகளாக பாமக மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகள் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பாமகவின் விருப்பமாகும். இத்தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரு முறை நடத்தப்படவுள்ளன. ஜனவரி மாதத்தில் இல்லாவிட்டாலும், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகளையாவது தமிழ் மொழியில் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும்.

ஐஐடி கூட்டு நுழைவுத்தேர்வுகள் மட்டுமின்றி தேசிய அளவில் நடத்தப்படும் அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x