

விருதுநகர் அருகே உள்ள நாராயணபுரத்தில் பாரத பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் ரூ.30 கோடியில் பாரத மாதா கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் - அழகாபுரி சாலையில் விருதுநகரிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள நாராயணபுரத்தில் நாட்டிலேயே மிக உயரமாக சுமார் 30 அடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறக்கட்டளை அறங்காவலர் நாகராஜன் கூறுகையில், "நமது பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும் அதனை பேணிக் காக்கவும் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பாரத மாதா கோயில் மற்றும் தியான ஈஸ்வர் கோயிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேசத் தலைவர்கள் மற்றும் ஆன்மிக அறிஞர்களது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.30 கோடி திட்ட மதிப்பில் இக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. பாரத கலாச்சாரம் மற்றும் தேசபக்தியை அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு சுற்றுலா தலமாக விளங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
அதோடு, இங்கு இலவசமாக பரதநாட்டியம், வீணை, யோகா, சிலம்பம், தியானம் மற்றும் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள் இலவசமாக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கட்டி முடிக்கப்பட்டுள்ள 30 அடி உயர பாரத மாதா சிலை திறப்புவிழா விரைவில் நடத்தப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
அறக்கட்டளைத் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், சுப்பிரமணிய சிவாவின் வாழ்நாள் கனவினை பூர்த்தி செய்யும் விதமாக இந்த பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும் அரசியல் மற்றும் ஜாதி பேதங்களை தாண்டி பொதுநல நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பட்டய கணக்காளர் தர்மராஜன் கூறுகையில், "பொது மக்களின் ஆதரவுடன் இந்தப்பணி நடைபெற்று வருவதாகவும் இப்பணிக்கு உதவி செய்வோருக்கு வருமான வரி சட்டத்தின்கீழ் 50 சதவிகிதம் வரிச்சலுகையும் உள்ளது" என்றார்.