Published : 28 Nov 2019 01:58 PM
Last Updated : 28 Nov 2019 01:58 PM

கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படுமா?

உதகையிலிருந்து கல்லட்டி-மசினகுடி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைப்பாதை வாகன ஓட்டிகளுக்கு சவாலான பயணமாகும். செங்குத்தான மலைப்பாதையில் வாகனங்களை இரண்டாம் கியரிலேயே இயக்க வேண்டும் என வாகனஓட்டிகளுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மலைப்பாதையில் வாகனங்கள் இயக்கி அனுபவம் இல்லாதவர்கள் சில நேரங்களில் வாகனங்களை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பார்ப்பதற்கு எளிதான பாதையாக இருக்கும் இந்தப் பாதை உறங்கும் ஆபத்தாகவே கருதப்படுகிறது.
இந்த மலைப்பாதையில் பாதுகாப்பு கருதி பிரேக் பிடிமானம் குறைவாகவுள்ள மேக்ஸி கேப் மற்றும் வேன் வகை
இலகு ரக வாகனங்கள் அனுமதிக்கப் படுவதில்லை. வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத் துறை மூலம் கொண்டை ஊசி வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகள் மூலம் கீழிலிருந்து மற்றும் மேலிருந்து வரும் வாகனங்களைக் காண இயலும்.

உயிரிழப்புகள்

இந்த மலைப்பாதை புதுமந்து காவல் நிலையத்துக்கு உட்பட்டது. மலைப்பாதைக்கும் புதுமந்து காவல்நிலையத்துக்கும் சுமார் 15 கி.மீ. தூரம். விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து விபத்து பகுதிக்கு போலீஸார் வந்துசேர குறைந்தது அரை மணி நேரமாகும். புதுமந்து போலீஸார் கூறும்போது, ‘இந்த மலைப்பாதையில் கடந்த 10 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசுப் பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில், ஓட்டுநர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2010-ம் ஆண்டு மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 2017-ம் ஆண்டு 7 பேரும், 2018-ம் ஆண்டு 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மலைப்பாதையில் விபத்து களை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் நெடுஞ்சாலைத் துறை மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சில சமூக விரோதிகள் குவி கண்ணாடிகளை உடைத்தும், திருடியும் செல்வதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். தலைகுந்தா பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கூடலூர் மார்க்கமாக திருப்பி அனுப்பப்படுகின்றன.

சிலர், தலைகுந்தா அருகேயுள்ள அத்திக்கல் கிராமம் வழியாக கல்லட்டி மலைப்பாதையை அடைய முற்படுவதால், அந்த சாலையையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். போலீஸார் இல்லாத நேரங்களில் சிலர் இந்த சாலையில் சென்று விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர், என்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, கல்லட்டி மலைப் பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதித்தது. உள்ளூர் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடை இன்றளவும் நீடிப்பதால், மாவனல்லா, மசினகுடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. கல்லட்டி மலைப்பாதையில் உரிய பாதுகாப்புடன் சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகனிடம் கூறும்போது, ‘‘கல்லட்டி மலைப் பாதையில் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், இந்தாண்டு ஒரு விபத்துக்கூட ஏற்படவில்லை, உயிரிழப்புகளும் இல்லை. இந்தப் பாதையில் உள்ளூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மனித உயிருக்குத் தான் முன்னுரிமை. சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். தற்போது, காவல்துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் சாலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். இந்த அறிக்கையின் பேரில் பாதுகாப்பு குளறுபடி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்’ என்றார்.

வி.சசிமோகன்

- ஆர்.டி.சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x