Published : 28 Nov 2019 01:58 PM
Last Updated : 28 Nov 2019 01:58 PM

இதயம் காக்கும் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திக் கொண்டவர்களுடன் மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், இருதய சிகிச்சை மருத்துவர்கள்.

மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையானது, நோயாளிகளுக்கு நவீன இதய சிகிச்சை வழங்குவதில் சிறப்பான வளர்ச்சிகண்டு வருகிறது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி என 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை மையமாக உள்ளது. இங்கு உயர் சிகிச்சைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் உள்ளது.

எனவே, மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இதனிடையே, இதயநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில், சேலம் அரசு மருத்துவமனை முன்னேற்றப்பாதையில் பயணிக்க தொடங்கி யுள்ளது. குறிப்பாக, இதயத்தில் ஏற்படும் அடைப்பு மற்றும் வயது மூப்பு ஆகியவற்றால் சிலருக்கு இருதயத் துடிப்பின் அளவு குறைந்துவிடும்.

மேலும் திடீரென மயங்கி விழுதல், மூச்சு விடுதலில் சிரமம், தலைச் சுற்றல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாவர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண மாக, இதய துடிப்பினை தூண்டிவிடும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தும்போது, அவர்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். எனினும், பேஸ்மேக்கர் கருவி மற்றும் அதனை இதயத்தில் பொருத்துவது என சுமார் ரூ.3 லட்சம் வரை செலவாகும்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை தொடங்கப்பட்ட 2 மாதங்களில் வெற்றிகரமாக 5 நோயாளிகளுக்கு அக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், இதய சிகிச்சைப்பிரிவு துறைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கூறும்போது, ‘சேலம் அரசு மருத்துவமனையில், இதய சிகிச்சைக்காக மாதத்துக்கு 15000 பேர் வரை சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 400 முதல் 500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதய பாதிப்பைக் கண்டறிய, நடை இயந்திரம் மூலமாக மாதத்துக்கு 130 முதல் 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

எக்கோகார்டியோகிராம் பரிசோதனை 4,000 முதல் 4,500, ஆஞ்சியோகிராம் சிகிச்சை 120 முதல் 140, இதய நாளத்தில் அடைப்பு உள்ள இடத்தில் ‘ஸ்டென்ட்’ பொருத்தும் சிகிச்சை 120 முதல் 140 நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதயத் துடிப்பு குறைந்துவிட்ட 5 நோயாளிகளுக்கு பேஸ்மேக்கர் கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டதால் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேஸ்மேக்கர் கருவியை நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளோம்.

இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பேஸ்மேக்கர் கருவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. திறமை வாய்ந்த மருத்துவக் குழுவினர் இருப்பதால், சிறப்பான இதய சிகிச்சையை வழங்கி வருகிறோம்’ என்றனர்.

- எஸ்.விஜயகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x