Published : 28 Nov 2019 01:50 PM
Last Updated : 28 Nov 2019 01:50 PM

வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிப்பு: சவால்களை சமாளிக்குமா திருப்பூர் தொழில்துறை?

தீபாவளிக்குப் பிறகு ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, திருப்பூர் பின்னலாடை ஆர்டர்களுக்கான வர்த்தக விசாரணை அதிகரித்துள்ளது. பிற நாடுகளின் போட்டிகளுக்கு மத்தியில் குறைந்த விலை கொடுத்து ஆர்டர்களை தக்க வைக்க தொழில் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கேற்ப திருப்பூரின் உற்பத்தி திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் தொழில் துறையில் நிலவிவரும் மந்தநிலை திருப்பூர் பின்னலாடைத் துறையையும் விட்டு வைக்கவில்லை. மந்த நிலையைப் போக்க மத்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது தொழில் துறை பழைய நிலை நோக்கி திரும்பி வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பூர் தொழில் துறையும் மந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக தீபாவளிக்கு பிறகு திருப்பூர் பின்னலாடை துறைக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்டர்களுக்கான வர்த்தக விசாரணை அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். பிற நாடுகளுடன் உள்ள போட்டிக்கு மத்தியில் குறைந்த விலை கொடுத்து, வர்த்தக விசாரணைகளை ஆர்டர்களாக மாற்றி, தக்க வைத்துக் கொள்ளும் பணிகளில் திருப்பூர் தொழில் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “தீபாவளி பண்டிகைக்கு பிறகு தற்போது தான் திருப்பூர் தொழில் துறை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

அதேபோல மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் அதிக வர்த்தக விசாரணைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது நல்ல விஷயம். பிற நாடுகளுடன் போட்டி போட்டு அவற்றை ஆர்டர்களாக பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.ஆனால் எங்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், மூலப்பொருளுக்கு சீரான விலையில்லாததுதான். அதோடு தொழிலாளர் பற்றாக்குறை.

நாட்டில் மூலப் பொருளான பஞ்சு மற்றும் நூல் விலை எப்போதும் சீராக இருப்பதில்லை. இதற்கு மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடைத் தொழில் சார்ந்து சுமார்
10 லட்சம் தொழிலாளர்கள் வரை உள்ளனர். இருப்பினும் தொழிலாளர் பற்றாக்குறை என்பது தீர்ந்தபாடில்லை. உள்ளூர் தொழிலாளர்கள் வாரத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் விடுப்பு எடுத்து விடுகின்றனர். சராசரியாக பார்த்தால் வாரத்தில் 4 நாட்களே வேலை நடைபெறுகிறது.

மாதத்தில் 26 நாட்களுக்குப் பதிலாக 16 நாட்களே வேலை நடைபெறுகிறது. இதனால் திட்டமிட்டபடி ஆர்டர்களை முடித்துக் கொடுக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. அவசரத்துக்கு வேறு வழியில்லாமல் பேசிய தொகையை விட அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை பிடித்து வேலையை முடிக்க வேண்டியுள்ளது.இப்பிரச்சினைக்கு தீர்வு காண தற்போதுள்ள தொழிலாளர்
களுக்கு திறன் மேம்பாடு அவசியம்.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஒரு சில திட்டங்களின் கீழ் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த திருப்பூரின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் அளவில் அது இல்லை. ஒட்டுமொத்த உற்பத்தி திறனை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு மேற்கொண்டு உதவ வேண்டும்.ஏற்கெனவே இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கான வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.

தொழில் துறையினரை அழைத்து ஆலோசனை கேட்கின்றனர். இருப்பினும் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளில் அரசுகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள தொழில் துறையினரும் ஒருங்கிணைந்து கருத்துகளை மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைப்பது இந்நேரத்தில் நல்லது” என்றார்.

பெரிய கட்டமைப்பு தேவை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, “வர்த்தக விசாரணைகள் அதிகளவில்
வருகின்றன.ஆனால் வெளிநாட்டு வர்த்தகர்கள் குறைந்த விலைக்கு கேட்பதே பிரச்சினையாக உள்ளது. இதற்கு திருப்பூரின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதே அவசியமானது. உற்பத்தியாளர்கள் திறன் மேம்பாடுள்ள தொழிலாளர்களை சரியாக பயன்படுத்தி உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். திறன் மேம்பாட்டுக்கென பெரிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகிறோம்” என்றார்.

- பெ.ஸ்ரீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x