Published : 28 Nov 2019 01:31 PM
Last Updated : 28 Nov 2019 01:31 PM

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நகராட்சியால் அழிக்கப்பட்ட குளத்தை மீட்க நகராட்சிக்கு ரூ 1.50 கோடி ஒதுக்கீடு

நகராட்சியால் மூடப்பட்டு மைதானமான குளம்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆதீவாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலையொட்டி குளம் ஒன்று இருந்து வந்தது. இதனை நகராட்சி நிர்வாகம் பூந்தோட்டம் குளம் என்று தங்களின் ஆவணங்களில் பதிவேற்றியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை குளமாக இருந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் சேரும் சுமார் 10 டன்
எடையுள்ள குப்பைகளை தொடர்ந்து கொட்டி வந்தது. 75 சதவீதம் குப்பைகளாலேயே சமன் செய்யப்பட்டு பின்பு, இனி இதற்கு இந்த இடம் பயன்படாது என்று நகராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் குப்பைகளைக் கொட்ட துவங்கியது.

குப்பைக்கூளமும், கட்டிட இடிபாடு மண்களும் சேர்ந்து அந்த இடம் மேடாக, அங்கு டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. நாளடைவில் அங்கு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே இக்குளத்தை மீட்க வலியுறுத்தி 'நல்லோர் வட்டம்' என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது.

கரிகாலன் பசுமை மீட்பு படை என்ற அமைப்பு, அப்போதைய ஆட்சியரிடம் குளத்தின் குப்பைகளை நாங்கள் அகற்றுகிறோம். அள்ளப்பட்ட குப்பைகளை கொட்ட இடம் மட்டும் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டது. மாவட்ட நிர்வாகம் இதனை பொருட்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து இங்கு நடைபாதை வியாபாரிகள் கடைகள் அமைத்து கொள்ளவும், நகராட்சி சார்பில் வணிகவளாகம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததால் அந்த முடிவை நகராட்சி கைவிட்டது.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு வந்திருந்த தமிழக முதல்வர் பழனிசாமி, ரூ 1.50 கோடி மதிப்பீட்டில் பூந்தோட்டம் குளம் சீரமைப்பு மற்றும் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இது குறித்து நம்ம விழுப்புரம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரஃபி நூர்பாஷா கூறியது:

21.07.2017ம் ஆண்டு முதல்வரின் தனிபிரிவுக்கு அனுப்பிய மனுவிற்கு குப்பை கொட்டாமல் இந்தக்குளம் கண்காணிக்கப்படு வதாக நகராட்சி நிர்வாகத்தால் பதில் அளிக்கப் பட்டுள்ளது. ஆக அதற்கு முன்பு குப்பை கொட்டியதை நகராட்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது இதைச் சீரமைக்க 1.50 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் 2003 ம் ஆண்டு தான் திறந்தார்கள் அதற்கு முன் இருந்த பேருந்து நிலையம் அருகில் இருந்த இக்குளத்தை சரிசெய்யாமல் இப்போ து செலவிடும் ரூ 1.50 கோடியும் மக்களின் வரி பணமே. தற்போது ஒதுக்கிய 1.50 கோடி நிதியை விழுப்புரம் நகரத்தின் வளர்ச்சிகாகவும், மக்களின் அடிப்படை தேவைக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.


முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

இது குறித்து கரிகாலன் பசுமை மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அகிலன் கூறியது:

எங்கள் அமைப்பின் சார்பாக இக்குளத்தை மீட்டெடுக்க தயாராக இருக்கிறோம். அக்குளத்தில் இருந்து எடுக்கும் மண்ணை கொட்டுவதற்கு ஏதாவது கல்குவாரி அல்லது கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அனுமதி வாங்கித் தாருங்கள் என்று இதற்கு முன் இருந்த ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தோம் அதற்கு ஆட்சியர், 'அப்படிச் செய்வதில் நிறைய இடர்பாடுகள் உள்ளன.

எனவே, நீங்கள் முத்தம்பாளையம் ஏரியை சரி செய்யுங்கள்' என்றார். விழுப்புரம் நகராட்சி யே இந்தக் குளத்தில் குப்பைகள் மற்றும் நகராட்சியில் சாலை பணிகளின்போது எடுக்கப்படும் கற்களை கொட்டி மூடியது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி முழுமையான கோயில் குளமாய் மீட்க வேண்டும் என்றார்.

மேலும் இது குறித்து எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறியது:

பூந்தோட்டம் குளத்தை தூர்த்து பழைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது என்னும் நடவடிக்கை 1994 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. அதற்காகத்தான் குளத்தைச் சுற்றியிருந்த வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பின்னர் வந்த திமுக ஆட்சியிலும் இதே நிலை தொடர்ந்தது. பூந்தோட்டம் குளத்தை மூடி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது என விழுப்புரம் நகர மன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது குளத்தை சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டு, விழுப்புரத்திற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி அதற்கானப் பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

குளத்தை மீண்டும் குளமாக்க நகராட்சி நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.
இதே போல் விழுப்புரத்தில் இருக்கும் ஐயனார் குளம் மற்றும் ஊறல் குட்டை ஆகிய நீர் நிலைகளையும் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

இதே போல் விழுப்புரம் நகரில் கட்சியின் பெயரால் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை அதிமுக அரசு மீட்டு வருவது வரவேற்க கூடியதே. இவ்வாறு அவர் கூறினார்.

- எஸ். நீலவண்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x