

திருப்பூர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருப்பவர் அன்பகம் திருப்பதி. திருப்பூர் மாநகராட்சியில் முன்னாள் நிலைக்குழு தலைவராகவும் இருந்தவர்.
இவருக்கு சொந்தமான தங்கும் விடுதி வளர்மதி பாலம் அருகே நொய்யலாற்றை ஒட்டியுள்ளது. அந்த கட்டிடத்துக்கு மாநகராட்சியினர் குறைவான வரி விதித்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளி யானது.இந்நிலையில், திருப்பூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஆட்சியர் கே.விஜய கார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஆட்சியர்,
‘இவ்விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அன்பகம் திருப்பதி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘கடந்த 2017-ம் ஆண்டு கட்டிடம் கட்டும் முன் வேலையாட்கள் தங்கும் சிறிய வீடு போன்ற கட்டிடம் மட்டுமே இருந்தது. அதற்கு போடப்பட்ட வரி ரசீது வாட்ஸ்அப்-பில் பகிரப்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டி 9 மாதங்களே ஆகிறது.
புதிய கட்டிடத்துக்கு என்ன வரியோ அதை செலுத்த தயாராக உள்ளேன். வரியை நிர்ணயித்து தருமாறு மாநகராட்சியினரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறேன். வரி உயர்வு பிரச்சினையால் நிலுவையில் உள்ளது. வரி நிர்ணயித்தவுடன் செலுத்தி விடுவேன்’ என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்களில் பரவி வருவது 2017-ம் ஆண்டுக்கான ரசீது. அப்போது தங்கும் விடுதி கட்டப்படவில்லை. அந்த இடத்தில் ஓர் அறையுள்ள சிறிய கட்டிடம் மட்டுமே இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பெரிய அளவில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதற்கான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன.
வரி உயர்வு பிரச்சினை காரணமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், விடுதிக்கான வரி விதிக்கப்படும்’ என்றனர்.