

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 17 பேர் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ராசாவின் வீடு உட்பட 20 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஆ.ராசா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், ராசாவின் நண்பரும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநர் ரஹானா பானு (2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்ட சாதிக்பாட்சாவின் மனைவி) உட்பட 17 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ அதிகாரிகள் புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து 17 பேருக் கும் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். பெரம்பலூரில் உள்ள ஆ.ராசாவின் வீடு, ரஹானாபானு மற்றும் குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகள், ஆ.ராசாவின் அண்ணன் ஆ.கலியபெருமாளின் பெரம்பலூர் மோட்டார் வாகன நிறுவனம், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் உள்ள ஐடிசி ஏஜென்ஸி அலுவலகங்கள், சாதிக்பாட்சாவின் நண்பரும் ஆடிட்டருமான சுப்பிரமணியன் வீடு, கோவையில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக்பாட்சா வீடு, தி.நகரில் உள்ள கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் அலுவலகம் உட்பட 6 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், பெரம்பலூரில் 8 இடங்களிலும், திருச்சியில் 3 இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், ரசீதுகள், வருமான வரி கணக்கு விவரங்கள் உட்பட ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாகவும், இதுகுறித்த விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா அளித்த தகவலில் தனது பெயரில் ரூ.1.45 கோடி சொத்துக்கள் இருப்ப தாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் ரூ.93.93 லட்சமும், மகள் பெயரில் ரூ.18.15 லட்சமும் சொத் துக்கள் இருப்பதாகவும் தெரிவித் துள்ளார். ஆனால், தற்போது அவரிடம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் இந்த சொத்துக்களை வைத்திருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.