

சென்னை
இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் மறைமுக மறுபயன்பாடு முறையின் மூலம் கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரித்து, பெருங்குடி, போரூர் ஏரிகளில் கலந்து, அந்த தண்ணீரை சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் ரூ.88 கோடியில் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் பருவமழை எதிர் பார்த்த அளவு பெய்வது இல்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிறது. குறிப்பாக சென்னை மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே, சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குடிநீர் ஏரிகள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், விவசாயக் கிணறு கள், கல்குவாரிகள், பாசன ஏரிகள் என பல்வேறு வழிகளில் தண்ணீர் பெறப்படுகிறது. இருப்பினும், எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, நீர் ஆதாரங் களைப் பெருக்குவதோடு, கழிவு நீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மூலம் சுத்திகரித்து பயன்படுத்துவதி லும் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒருபகுதியாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கழுவேலி ஏரி நீரைச் சுத்திகரித்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது தொடர்பாக தமிழக நதி நீர் பாதுகாப்பு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால், அந்த ஏரியை அண்மையில் ஆய்வு செய்தார்.
அதுபோல, இஸ்ரேல், ஸ்வீடன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின் பற்றப்படும் மறைமுக மறுபயன் பாடு (Indirect Potable Reuse) முறை மூலம் கழிவுநீரை 100 சதவீதம் சுத்தி கரித்து அந்த தண்ணீர் பெருங்குடி, போரூர் ஏரிகளில் விடப்படும். பின் னர் அதைச் சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீராக வழங்குவதற் கான திட்டப் பணிகள் ரூ.88 கோடியில் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:
கழிவுநீரைச் சுத்திகரித்து மக்கள் பயன்படுத்துவதற்கு, பெரும்பா லான வளர்ந்து நாடுகள் மறைமுக மறுபயன்பாடு முறையைத்தான் பின்பற்றுகின்றன. அந்த முறையை நாம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். அதன்படி, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு மூலம் கழிவுநீர் 100 சதவீதம் சுத்திகரிக்கப்பட்டு, பெருங்குடி ஏரியில் விடப்படும். அதுபோல போரூர் ஏரியிலும் விடப்படும்.
இவ்வாறு தினமும் 10 மில்லியன் தண்ணீரை, ஏரிகளில் உள்ள நன்னீருடன் கலக்கும்போது, மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நீராக கிடைக்கும். பின்னர் அந்த நீரை மீண்டும் சுத்திகரித்து சென்னை மக்களுக்கு குடிநீராக விநியோகிக் கப்படும். இதற்காக பெருங்குடி, போரூர் ஏரிப் பகுதிகளில் தலா ரூ.44 கோடி செலவில் நீர் சுத்தி கரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. இப்பணிகள் வரும் மார்ச் மாதத் தில் முடிவடைந்து, ஏப்ரல் முதல் சென்னைக்கு குடிநீர் விநியோகிக் கப்படும். இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதும் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
கழிவுநீரில் ஒரு சதவீதம்தான் கழிவு உள்ளது. மீதமுள்ள 99 சத வீதம் நன்னீர்தான். இதை நாம் அனைவரும் உணர வேண்டும். தண்ணீரில் உள்ள பாக்டீரியாக் களை நீக்கிவிட்டாலே அது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தண்ணீ ராகி விடும். மறைமுக மறுபயன் பாடு முறை நிறுவவும், இயக்கவும், பராமரிக்கவும் எளிது, செலவும் குறைவு என்பதால் தமிழகம் முழு வதும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.