வாக்காளர் பட்டியலிலிருந்து 95,000 பேர் நீக்கம்: தேர்தல் பார்வையாளரிடம் திமுக புகார்

வாக்காளர் பட்டியலிலிருந்து 95,000 பேர் நீக்கம்: தேர்தல் பார்வையாளரிடம் திமுக புகார்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 95,000 பேரை அலுவலர்கள் உள்நோக்கத்துடன் நீக்கியிருப்பதாகவும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார். இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் க.மணிவாசன் பங்கேற்றார்.

அப்போது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுமார் 95,000 வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். அதில், 35,000 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலேயே இறந்தவர்கள் 5,000 பேர் மட்டுமே. தேர்தல் அலுவலர்கள் உள்நோக்கத்தோடு வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன்அரசு முறையிட்டார்.

இதேபோல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் வாக்காளர் பட்டியலை குளறுபடி இல்லாமல் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் சிறப்பு மேற்பார்வையாளர் மணிவாசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in