

முதல்வர் சென்னையில் இல்லாத காரணத்தால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் பிரதமரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டுள்ளதாகவும் பாத்திமாவின் தந்தை லத்தீஃப் தெரிவித்தார்.
சென்னை ஐஐடியில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீஃப், கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனில், தனது தற்கொலைக்குக் காரணம் என பேராசிரியர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
பேராசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீஃப், தாயார், சகோதரி ஆகியோர் வலியுறுத்தினர்.
இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கு விசாரணையை மாற்றி ஒப்படைத்தார். கடந்த 16-ம் தேதி மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலினா உள்ளிட்டோர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் தங்கியுள்ள கேரள சமாஜத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு முன் செல்போனில் தனது தற்கொலைக்கான காரணத்தைப் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்பட்டது. அந்த செல்போன் தடயவியல் துறையினர் வசம் இருந்தது. அதை அன்லாக் செய்யும் முன் தன் முன்னிலையில் அன்லாக் செய்யவேண்டும் என்று பாத்திமாவின் தந்தை லத்தீஃப் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்படி செல்போன் சீல் வைக்கப்பட்ட கவரில் போட்டு தடயவியல் துறையிடம் இருந்தது. அதனை அன்லாக் செய்து கொடுக்க இன்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் மற்றும் சகோதரி சென்னை வந்திருந்தனர்.
சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் ஆஜரான லத்தீஃப், பாத்திமாவின் செல்போனை அன்லாக் செய்து கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லத்தீஃப், சீலிடப்பட்ட உறையில் இருந்த செல்போனை அன்லாக் செய்து தடயவியல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்தார். செல்போனில் உள்ள பதிவுகளை ஆய்வுக்கு எடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தடயவியல் துறை இயக்குனர் வாக்குறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.
இதன் பின்னர் லத்தீஃப், தன் வசம் இருந்த பாத்திமாவின் டேப் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தியிடம் ஒப்படைத்தார். முதல்வர் சென்னையில் இல்லாத காரணத்தால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் பிரதமரைச் சந்திக்க அப்பாயின்மென்ட் (நேரம் ஒதுக்கித் தர) கேட்டுள்ளதாகவும் லத்தீஃப் தெரிவித்தார்.