ஆயுள் தண்டனை பெண் கைதி மனநல மருத்துவமனையில் தற்கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆயுள் தண்டனை பெண் கைதி மனநல மருத்துவமனையில் தற்கொலை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி ஒருவர், மனநல மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நல்லகொண்டான் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (65). இவர் 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் தொரப்பாடி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், அயனாவரம் அரசு மனநல மருத்துவமனை கைதிகள் வார்டில் கடந்த 8 மாதங்களாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி யாருமில்லாத நேரத்தில் அவர் மருத்துவமனை அறையில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தலைமைச் செயலக காலனி போலீஸார் ராஜம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை பணியாளர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜம்மாள் உடல், மனநலம் தேறி வந்த நிலையில் தன்னை உறவுகள் யாரும் பார்க்க வரவில்லையே என அடிக்கடி புலம்பி இருந்ததாகவும், அந்த மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

அரசு மனநல மருத்துவமனையில் ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், மனநலக் காப்பகத்தில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் 5 வாரத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in