Last Updated : 27 Nov, 2019 04:36 PM

 

Published : 27 Nov 2019 04:36 PM
Last Updated : 27 Nov 2019 04:36 PM

மேலவளவு வழக்கில் முன் விடுதலையான 13 பேரும் ஊருக்குள் நுழைய உயர் நீதிமன்றம் தடை: வேலூரில் தங்கியிருக்க உத்தரவு

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்விடுதலையான 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

13 பேரும் வேலூரில் தங்கியிருந்து வேலூர் எஸ்பி முன்பு 2 மாதத்துக்கு ஒரு முறை முதல் மற்றும் 3-வது ஞாயிற்றுகிழமைகளில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவரும் பாஸ்போர்ட்டை (இருந்தால்) உடனடியாக மதுரை எஸ்பியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6.1.2020-க்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ரத்தினம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.

கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன் விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் 13 பேர் விடுதலையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது நீதிபதிகள் தரப்பில், "மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக் கூடாது என ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வழக்கு மீண்டும் 4.15 மணியளவில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

அப்போது, மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்விடுதலையான 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x