

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை மற்றும் பாசன குளங்களை 750 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் இரண்டாவது கட்டப் பணி வரும் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மறுசீரமைப்பு கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர். சத்தியகோபால் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்ட தருவைகுளம் உள்ளிட்ட குளங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி உடன் ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு குளங்களிலின் பரப்பளவு அதன் முந்தைய நீர் இருப்பு தூர்வாரப்பட்ட பின் தற்போது நீர் இருப்பு எவ்வளவு அதிகரித்துள்ளது. அதன் மூலம் பெறப்பட்டுள்ள பாசன பயன்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 குளங்களை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டதில் 12 பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. பல குளங்களில் பணிகள் 80 சதவீதம் அளவிற்கு முடிந்துள்ளன.
மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் 1800 குளங்கள் தூர்வார திட்டமிடப்பட்டத்தில் சுமார் ஆயிரம் குளங்கள் முழுமையாக தூர்வார்ப்பட்டுள்ளன, எஞ்சிய 800 குளங்கள் 80 முதல் 90 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிந்துள்ளன.
தற்போது பருவமழை பெய்ததால் தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எனவே வேலை முடிவடையாத குளங்களில் பருவமழைக்கு பின் வேலை தொடங்கி செயல்படுத்தபடும்.
மழையின் போது தண்ணீர் உபரியாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் இத்திட்டத்தில் முதலில் வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து மதகுகள் சரிசெய்யப்பட்டு,கரைகள் பலபடுத்தப்பட்டன. இதனால் அரசு எதிர்பார்த்தது போன்று தற்போது பெய்த மழையால் தண்ணீர் அதிகளவில் சேமிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக குடிமராமத்து திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டிய இரண்டாவது கட்டப் பணிக்கான குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் பிப்ரவரி,மார்ச் மாதம் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.
தேவைப்பட்டால் ஆயிரம் கோடி ரூபாய் வரையோ அல்லது அதற்கு மேலோ நிதி ஒதுக்கீடு பெறப்படும்" என்றார்.
மேலும், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மறுசீரமைப்பு கழகத்தின் மூலம் தமிழகத்தில் மழை வெள்ள நீரை நீண்ட கால தேவைக்கு ஏற்ப சேமிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
குறைந்த தண்ணீரில் மரங்களை வளர்க்கும் மியாவாக் முறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் மரங்கள் வளர்க்க முடியும் என ஆய்வு செய்யபட்டுள்ளது. நீர்நிலைகள் மற்றும் அதனை அடைக்கும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக அகற்ற தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.