

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் 'இம்சை அரசன்' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவ.27) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்வதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை எனக்கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசிய போது, "தமிழகத்தில் யார் 'இம்சை அரசன்' எனக் கேட்டால் மு.க.ஸ்டாலின்தான். திமுக பொதுக்குழுவில் தங்கள் கட்சியினரைத் தூண்டும் விதத்தில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு யார் இம்சை செய்கிறார்? ஸ்டாலின்தான் 'இம்சை அரசன்'" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.