பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் இலவசத் தொகுப்பு வழங்குவதற்காக, ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தைப்பொங்கலின்போது தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பொங்கல் பரிசில் ரூ.1,000 வழங்கப்படும். அதுதவிர, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசில் இருக்கும்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு இன்று (நவ.27) வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அரிசி அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்பதால், இந்த ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
