Published : 27 Nov 2019 12:25 PM
Last Updated : 27 Nov 2019 12:25 PM

வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க மதுரையில் நுழையும் வாகனங்கள்: நகருக்குள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

மதுரை சுற்றுச்சாலையில் புதிதாக 3 டோல் கட்டண மையங்கள் திறக்கப்பட்டிருப்பதால் பயண நேரம், அதிகரிப்பதையும், கட்டணத்தையும் தவிர்க்க வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்வதால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாகனங்கள் மதுரை நகர் வழியே சென்றதால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிர்க்க மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ. தூரத்துக்கு சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது.

இந்தச் சாலையில் மதுரை மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் டோல் மையங்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இங்கு ஒப்பந்தக் காலம் முடிந்தும் டோல் கட்டணம் வசூலித்ததை உயர் நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தியது. இதையடுத்து டோல் மையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் மதுரை சுற்றுச்சாலை மாநில நெடுஞ் சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்ப டைக்கப்பட்டு ரூ.213 கோடியில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் 3 இடங்களில் புதிதாக டோல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரை வழியாக தென் மாவட்டங் களுக்குச் செல்லும் வாகனங்கள் சிட்டம்பட்டியில் தொடங்கி கப்பலூர் வரை 36 கி.மீ. தூரத்தில் 5 டோல் கட்டண மையங்களையும், தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் 31 கி.மீ தூரத்தில் 4 டோல் கட்டண மையங்களையும் கடக்க வேண்டி உள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 3 டோல் மையங்களில் அதிக வழிப்பாதை இல்லாததாலும், கட்டண ரசீது வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாலும் ஒவ்வொரு டோல் கட்டண மையத்தையும் கடந்து செல்ல அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், டோல் கட்டண ஊழியர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் தினமும் தகராறு நடந்து வருகிறது. மோதலைத் தடுக்க டோல் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகருக்குள் நெரிசலில் சிக்காமல் இருக்க சுற்றுச்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் சென்ற வாகனங்கள், புதிய டோல் மையங்களால் பயண நேரம் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், 3 முதல் 5 டோல்கேட் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால் கட்டணத்தை (தனியார் வாகனங்கள்) தவிர்க்கவும், இந்த வாகனங்கள் மீண்டும் நகருக்குள் பயணிக்கத் தொடங்கியுள்ளன. மதுரையிலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி செல்லும் பஸ்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பஸ்களும் சுற்றுச்சாலை வழியாகவே செல்ல வேண்டும். இந்த பஸ்கள் மதுரை நகருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதிய டோல் மையங்களால் மீண்டும் பஸ்களும், வாகனங்களும் மதுரை நகர் வழியாகச் செல்கின்றன. ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் பெரியார் பஸ் நிலையப் பகுதியிலும், ஆண்டுக்கணக்கில் முடியாத மேம்பாலப் பணியால் காளவாசல் பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. தற்போது நகருக்குள் வாகனங்கள் செல்வதால் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து வாகன ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது: சுற்றுச்சாலை வழியாக திருமங்கலத்துக்கு 40 நிமிடத்துக்குள் சென்றுவிடலாம். புதிய டோல் மையங்களால் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை ஆகிறது.

தற்போது பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் விரைவு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. சுற்றுச் சாலை வழியாக விரைவு பஸ்கள் சென்றால் பல மணி நேரம் பிடிக்கும்.

இதனால் பயணிகளுக்காக பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் நகருக்குள் செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தாமதத்தைத் தவிர்க்க சுற்றுச்சாலைக்குப் பதில் திண்டுக்கல் சாலை வழியாக பயணம் செய்கின்றன.

சுற்றுச்சாலையில் புதிதாக டோல் மையங்கள் தேவையில்லை. சாலை வசதியை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூ லிப்பது தவறானதாகும்.

எனவே, மதுரை சுற்றுச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 டோல் கட்டண மையங்களையும் உடனடியாக மூட வேண்டும், என்று கூறினார்.

விதிமீறலால் பறிபோன 3 உயிர்கள்

கடந்த 23-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் நெல்லையில் இருந்து மதுரைக்கு பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து, சுற்றுச்சாலை வழியாக மாட்டுத்தாவணி செல்வதற்குப் பதிலாக நகருக்குள் நுழைந்தது. அந்தப் பேருந்து வேடர்புளியங்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே திருமங்கலத்தை நோக்கிச் சென்ற கார் மீது அசுர வேகத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த புகைப்பட நிபுணர்கள் 3 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவை மீறி நகருக்குள் நுழைந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.சாலை வசதியை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவறானதாகும்.

கிடைக்கும் வாடகை முழுவதும் டீசல், டோல் கட்டணத்துக்கே போய் விடுகிறது: புலம்பும் லாரி ஓட்டுநர்கள்

தென்காசியைச் சேர்ந்த அப்துல் நாசர்

லாரியின் உரிமையாளராகவும், ஓட்டுநராகவும் உள்ளேன். தென்காசியிலிருந்து சென்னைக்குச் சென்று வர டோல்கேட்டுக்கு மட்டும் ரூ. 8 ஆயிரம் கட்டணம் செலுத்துகிறேன். ஏற்கெனவே லாபமின்றி லாரியை இயக்கி வருகிறோம். தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையும் ரூ. 140 கட்டணம் வசூலிக்கிறது. இதுபோன்ற கட்டணங்களால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கிறது. ஒரு ரூபாய்கூட மிச்சம் கிடையாது. அன்றாடம் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. ஆனால், லாரிக்கான வாடகை மட்டும் உயரவில்லை. நாங்கள் சம்பாதிப்பது அனைத்தும் டோல் கட்டணமாகச் செலுத்தினால், நானும் எனது குடும்பமும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்றார் வேதனையுடன்.


திருநெல்வேலியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெய்லானி

தனியாரிடம் கடன் பெற்று சொந்தமாக லாரி வைத்திருந்தேன். டோல் கட்டணம், கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் லாரியை விற்றுவிட்டேன். அரசாங்கம் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி செய்வதுவோல் பணம் வசூலிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. டோல் கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்ட லாரி ஓட்டுநர் நடராஜன்

ஒரு கி.மீ.க்கு ரூ.4, 5 என வாடகையை பேரம் பேசி பாரம் ஏற்றி வருகிறோம். ஆனால், டோல்கேட்டில் அவர்கள் விருப்பம்போல் வசூலிக்கின்றனர். மதுரையைச் சுற்றிலும் டோல் மையங்கள் அமைத்து கட்டணம் வசூலித்தால் நாங்கள் என்ன செய்வது. ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை டோல் மையங்களில் சத்தமில்லாமல் கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு மாநில நெடுஞ்சாலைத்துறையும் இப்படி போட்டி போட்டு வசூலித்தால் எங்களைப்போன்று வாடகைக்கு ஓட்டும் வாகன உரிமையாளர்களின் பிழைப்பு என்னாவது? என்றார்.

சிவகங்கையைச் சேர்ந்த பாலமுருகன்

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஆனால், சாலை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் முன்னோட்டமாக மதுரை சுற்றுச்சாலையில் டோல் மையங்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மதுரை விமான நிலையத்துக்குச் செல்வதற்குக்கூட கட்டணம் செலுத்தி, 2 இடங்களில் சுமார் அரைமணி நேரம் தேவையின்றி காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விமானங்களைத் தவறவிடும் சூழல் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டோல் மையங்களை மூட வேண்டும். எத்தனையோ நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவுபோல் இதையும் நலத்திட்டமாகக் கருதி டோல் கட்டணமின்றி மக்கள் பயணம் செய்ய அரசு வழிவகுக்க வேண்டும்.

- கி.மகாராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x