Published : 27 Nov 2019 12:15 PM
Last Updated : 27 Nov 2019 12:15 PM

தென் மாவட்ட மக்களின் துயரம்: மதுரை டோல்கேட்டுகள்

வலையங்குளத்தில் வரிசையாக நிற்கும் வாகனங்கள்.

மதுரை உத்தங்குடி-கப்பலூர் வரையிலான 27 கிமீ தூரத்துக்குள் 3 இடங்களில் டோல் கட்டணம் வசூலிக்கும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் 20 ஆண்டு துயரமாக டோல் கட்டண வசூல் தொடர்கிறது. உள்ளூர் அமைச்சர்களின் மவுனத்தால் இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்க முடிவு செய்துள்ளன.

மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1999-ல் ரூ.29 கோடியில் உத்தங்குடி யிலிருந்து - கப்பலூர் வரை 27 கிமீ தூரத் துக்கு சுற்றுச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சுற்றுச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் 2013-ல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு சாலை உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.213 கோடியில் சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப் பட்டது. இப்பணி 2017 செப்டம்பரில் தொடங்கியது.

27 கிமீ தூரத்துக்கு 7.5 மீ அகலமுள்ள இருவழிச்சாலை 15 மீ அகலமுள்ள நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், வைகை ஆற்றில் விரகனூர் மேம்பாலம், அதனருகே ரயில்வே மேம்பாலம், கப்பலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. இந்தச் சுற்றுச்சாலை மதுரை- ராமேசுவரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, பெங்களூரு ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது.

இந்த 5 தேசிய நெடுஞ்சாலைகள் வழியாகச் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் வகையில், உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையில் 27 கிமீ தூரத்துக்குள் மஸ்தான்பட்டி, சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் டோல் மையத்தில் இருப்பது போல் இல்லாமல் இந்த மையங்களில் 5 வழிகள் மட்டுமே உள்ளதால் வாகனங்கள் செல்ல வழியின்றி தேக்கம் அடைகின்றன. கட்டணம் வசூலிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு டோல் மையத்திலும் சுமார் 30 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

மணிக்கணக்கில் காத்திருப்பு

மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்வோர் மஸ்தான்பட்டி டோல் மையத்திலும் விமான நிலையம், தூத்துக்குடி செல்வோர் 2-வது டோல் மையத்திலும், மதுரையிலிருந்து விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, பெங்களூரு செல்வோர் 3-வது டோல் மையத்திலும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப வழித்தட வசதியின்றி பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. எந்த நோக்கத்துக்காக சுற்றுச்சாலை அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டோல் மையங்கள் உள்ளன.

வசூல் தாமதம் ஏன்?

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் டோல் கட்டணம் மதுரையில் வசூலிக்கப்படுகிறது. ரூ. 213 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் ரூ. 243 கோடி செலவழித்து அதற்கான தொகையை கேட்டனர். தற்போது டோல் வசூலிக்கும் ஒப்பந்தத்தை, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் (மதுரை) நிறுவனத்தினர் எடுத்துள்ளனர். அந்நிறுவனத்தினர் வட மாநிலத்தவரை பணியில் நியமித்துள்ளனர்.


சிந்தாமணி டோல் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.

ஆனால், கணினி இயக்க உள்ளூரைச் சேர்ந்தவர்களே உள்ளனர். தற்போது மஸ்தான் பட்டியைத் தவிர்த்து மற்ற 2 டோல் மையங்களில் தலா 3 வழித்தடங்கள் வீதம் 6 வழித்தடங்கள் உள்ளன. மஸ்தான்பட்டி மையத்தில் 5 வழித்தடங்கள் மட்டுமே உள்ளதால் வாகனங்கள் செல்வதில் நெரிசல் ஏற்படுகிறது. 3 டோல் மையங்களும் ஜனவரிக்குள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்குப்பின் தாமதம் ஏற்படாது, என்று கூறினார்.

கண்டுகொள்ளாத அமைச்சர்கள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைப்படி நகரிலிருந்து 6 கிமீ அப்பால்தான் டோல் மையம் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். டோல் மையத்துக்கு இடையில் 60-லிருந்து 75 கிமீ தூர இடைவெளி இருக்க வேண்டும். மேலும் 6 கிமீக்குள் உள்ள வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதால் திருமங்கலத்திலிருந்து 6 கிமீக்குள் உள்ள கப்பலூர் டோல் மையத் தில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உத்தங்குடியிலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள மஸ்தான்பட்டியில் உள்ள டோல் மையத் தில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாள்தோறும் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்எல் ஏக்கள் டோல் மையப் பிரச்சினைகளில் கண்டு கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் மக்கள் திண்டாடுவதை இவர்களுக்கு யார் சொல்வது?

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் டோல் மையப் பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்து ஆளும்கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதைச் சாதகமாக்க எதிர்க்கட்சியினரும் இப்பிரச்சினையை கையில் எடுக்கவுள்ளது.

எனவே, ரூ. 213 கோடியில் அமைக்கப்பட்ட இச்சாலையை மானியமாகக் கருதி மக்கள் பயன் பாட்டுக்காக இலவசமாக்க வேண்டும். இதை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

மக்களுக்கு தண்டனை?

மதுரை மாநகராட்சி நிர்வாகம் உத்தங்குடி-கப்பலூர் சுற்றுச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைத்திருந்தால் அவர்களது கட்டுப்பாட்டில் வந்திருக்கும். இதனால், சிட்டம்பட்டி டோல் மையத்தில் கட்டணம் செலுத்தும் வாகனங்கள் ஓட்டிகள் இலவசப் பயணம் மேற்கொண்டிருப்பர். அடுத்ததாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, பெங்களூரு செல்வோர் தேவைக்கேற்ப கப்பலூர், எலியார் பத்தி டோல் மையத்தில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

முன்பு மாநகராட்சி டோல் மையமாக இருந்தபோது பலனடைந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்த தவறால் தற்போது மக்களுக்கு தண்டனையாக மாநில நெடுஞ்சாலைத் துறையின் டோல் மையங்கள் அமைந்துள்ளன.

‘பாஸ்டேக்’ திட்டம் வருமா?

வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாகச் செலுத்துவதால் சுங்கச் சாவடிகளில் பணப்பரிமாற்றத்துக்கு கூடுதல் நேரமாகிறது. இதைத் தவிர்ப்பதற்காக ‘பாஸ்டேக்' (FASTag) (மின்னணு கட்டணம்) முறைப்படி ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்' கார்டு வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டப்படும். வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அதற்குரிய கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும் வகையில் ‘பாஸ்டேக்’ மின்னணு அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் தாமதமின்றி 10 விநாடிகளில் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்.

ஒவ்வொரு முறை கடக்கும்போதும் அதற்குரிய தொகை வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. நேரம் மிச்சமாகும்.

மதுரை சுற்றுச்சாலை டோல் மையங்கள் மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ‘பாஸ்டேக்’ திட்டம் இங்கு செயல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றே வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x