

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணையில் ஆஜராக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், சகோதரி ஆகியோர் தடயவியல் துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
சென்னை ஐஐடியில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்தீஃப், கடந்த 9-ம் தேதி விடுதி அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கினார். அவரது செல்போனில், தனது தற்கொலைக்குக் காரணம் என பேராசிரியர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
பேராசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் அவரது தந்தை அப்துல் லத்தீஃப், தாயார், சகோதரி ஆகியோர் வலியுறுத்தினர்.
இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். வழக்கு போலீஸாரிடம் இருந்து தற்போது மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி வசம் ஒப்படைப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் மெகலினா இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலினா உள்ளிட்டோர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் தங்கியுள்ள கேரள சமாஜத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்துத் தகவல்களையும் தெரிவித்துவிட்டதாகவும், பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும், பாத்திமா பயன்படுத்திய டைரியையும் கொடுத்துவிட்டதாகவும் லத்தீஃப் தெரிவித்தார். லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன் உள்ளிட்ட சாதனங்களை போலீஸார் கேட்டதன் அடிப்படையில் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து அப்துல் லத்தீஃப் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் புதிய திருப்பமாக பாத்திமா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரளாவிலிருந்து விசாரணைக்காக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப், அவரது இளைய மகளுடன் சென்னை வந்தார்.
ஏற்கெனவே அவர் ஒப்படைத்த பாத்திமாவின் செல்போனைத் தடயவியல் துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினர். தற்போது அதை தனக்கு முன் திறக்கவேண்டும் என ஏற்கெனவே அவர் கோரிக்கை வைத்த அடிப்படையில் காமராஜர் சாலையில் உள்ள தடயவியல் துறையில் மகளுடன் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணைக்குப் பின் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தியைச் சந்திக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் செல்ல உள்ளதாக லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
பாத்திமாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, மற்றவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் லத்தீஃபிடம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கூடுதல் விசாரணை நடத்த உள்ளனர்.