வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது; தேவையான அளவுக்கு இறக்குமதி செய்க: முத்தரசன்

முத்தரசன்: கோப்புப்படம்
முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (நவ.27) வெளியிட்ட அறிக்கையில், "சமையலில் மிக முக்கியப் பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு கண்டிராத வகையில் என்றுமில்லாத அளவில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக தினக் கூலித் தொழிலாளர்களுக்கு வெங்காயம் வாங்க முடியாத பொருளாகி விட்டது.

வெங்காயத்தை உரித்தால்தான் கண்களில் தண்ணீர் வரும் என்ற நிலை மாறி, விலையைக் கேட்டாலே கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயம் பயன்படுத்துவது ஏழைக் குடும்பம், நடுத்தர குடும்பம், செல்வந்தர் குடும்பம் என்கிற பாகுபாடு இன்றி, அனைத்துத் தரப்பு குடும்பங்களும் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வெங்காயம் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

வெங்காயத்தை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து, விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in