Published : 27 Nov 2019 12:14 PM
Last Updated : 27 Nov 2019 12:14 PM

''ஆவின் பாலில் அப்லாடாக்சின் எம்-1; மறைக்கும் ஆவின் அதிகாரிகள்''- அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடவடிக்கை கோரும் பால் முகவர்கள் சங்கம்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

ஆவின் பாலில் அப்லாடாக்சின் எம்-1 நச்சுத்தன்மை குறித்து ஆவின் அதிகாரிகள் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக, பால் முகவர்கள் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, சு.ஆ.பொன்னுசாமி இன்று (நவ.27) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தனியார் பாலை விட ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரான பால் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரை பல்வேறு அமைச்சர்கள் ஊடகங்களில் அறிவித்து சான்றளித்து வருகின்றனர்.

பாலில் நச்சுத்தன்மை இருப்பதான மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சரான நீங்கள் மவுனம் காப்பது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி தாய்ப்பாலுக்கு நிகரான பால் என அமைச்சர்களால் சான்றளிக்கப்பட்ட ஆவின் பாலில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் அப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை அதிக அளவில் இருக்கிறது என எங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தத் தகவலை வெளியுலகுக்கு தெரியாமல் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஆவின் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதும் கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்ட பாலை அண்மையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வறிக்கை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு, தரம் குறைந்த பாலை குறைவான விலைக்கு வாங்கி அதன் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து விளையாடி வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு புற்றுநோய் வரக் காரணமே தனியார் பால் நிறுவனங்களின் பால் தான் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசி அந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீளவில்லை. இந்நிலையில் அப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை கலந்த, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் பால் விற்பனையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் ஆய்வறிக்கை வெளியிட்டது. இது பொதுமக்கள் பால் குடிப்பதையே தவிர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்ட பாலினை ஆய்வு செய்த ஆய்வறிக்கை முடிவை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அனைத்து பால் பண்ணைகளில் இருந்தும் பால் மாதிரிகளை எடுத்து அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஆய்வறிக்கையில் அப்லாடாக்சின் எம்-1 என்கிற நச்சுத்தன்மை இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் உண்மை நிலவரத்தை மக்களுக்கு ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதை சுகாதாரத்துறை அமைச்சர் என்கிற முறையில் உறுதி செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x