Published : 27 Nov 2019 12:05 PM
Last Updated : 27 Nov 2019 12:05 PM

மக்கும் கழிவுகளிலிருந்து தரமான உரம்: சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு பார்த்திபன் நன்றி

மக்கும் கழிவுகளிலிருந்து தரமான உரம் தயாரிக்கும் சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் பார்த்திபன். அங்கு அவரது இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஒத்த செருப்பு' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த உற்சாகத்தில் இருந்தவருக்கு சென்னை மாநகராட்சியின் உரம் தயாரிப்பு முயற்சி மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோராமா பிரிவில் எனது படம் ‘ஒத்த செருப்பு - சைஸ் 7’ தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது என்றாலும், அதையும் மீறிய ஒரு பெருமகிழ்ச்சிக்குக் காரணம், இன்றைய செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்த ஒரு முக்கியச் செய்தி .

அது விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், மாநகராட்சி நடைமுறைப்படுத்த உள்ள ஒரு திட்டத்தைப் பற்றி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருந்த ஒரு செய்தி. சென்னை மாநகரின் திடக்கழிவுகளிலிருந்து, கரிம உரங்களை பெரிய அளவில் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் தான் அது.

விவசாயம் குறித்த எனது நேரடி அனுபவங்களையும், உரவிலை உயர்வால் விவசாயிகள் அடைந்து வரும் துன்பத்தையும் கருத்தில் கொண்டு, கடந்த 2015-ம் ஆண்டில், நான் ஒரு வரைவுத் திட்டத்துடன் மாநகராட்சி தலைமை அலுவலகத்தை அணுகி, அவர்களுடன் இதன் நன்மை தீமைகள், நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆழமாக விவாதித்து, விரைவில் பெரிய அளவில் ஒரு இயற்கை உரத் தொழிற்சாலை அமைத்திட முயற்சிகள் மேற்கொண்டேன்.

இதன் மூலம், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கு உரங்களை இலவசமாக வழங்கிட முடியும், வேண்டும் என்பதாகும். இத்திட்டத்தின் மற்றொரு அளப்பரிய பலன் சென்னை நகரும் சுத்தம், சுகாதாரம் அடையும். மேலும் தற்போது சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிப்பு கிடங்குகளாகச் செயல்படும் பெருங்குடி, கொடுங்கையூர் ஆகியவற்றால் ஏற்படுகின்ற மாசுக் குறைபாட்டையும் தவிர்க்க முடியும் என்பதாலும், எனக்கு இத்திட்டம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. அந்த முயற்சிக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பலன் கிடைத்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், ‘கிராமப்புற விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுடன் சென்னை மாநகராட்சி இணைந்து, சென்னை நகரத்தில் தினசரி உருவாகின்ற 5000 டன் கழிவுகளில் இருந்து, மக்கும் கழிவுகளைப் பிரித்து, அதிலிருந்து தரமான இயற்கை உரத்தைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 30,000 ஏக்கர் நிலங்கள் வளம் பெறும் என்றும், மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த திட்டமாகவும் அமைகிறது. இந்தியாவிலேயே இது முதன்முதலாக நிறைவேற்றப்படும் ஒரு முன்மாதிரித் திட்டம் என்பதால் தமிழகத்திற்கே பெருமிதம்’ என்றார்.

இந்தத் திட்டம் மகத்தான வெற்றியடைய வேண்டும் என மனதார வாழ்த்தும் இந்த வேளையில், உரிய முயற்சிகளை மேற்கொண்டு இத்திட்டத்தை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த உதவியாக இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகின்ற அத்தனை உள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன்” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x