Published : 27 Nov 2019 11:28 AM
Last Updated : 27 Nov 2019 11:28 AM

சுலோச்சனா முதலியார் பாலத்துக்கு இன்று 177-வது பிறந்த நாள் கொடையாளரை விழா எடுத்து கவுரவிக்குமா அரசு? 

யுகம் யுகமாய் பாய்ந்தோடி மண் செழிக்க, மக்கள் வாழ வழிசெய்து கொண்டிருக்கும் தாமிரபரணியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல 200 ஆண்டுகளுக்கு முன்புவரை பரிசல்களே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பரிசல்களில் பயணம் மேற்கொள்ள தாமிரபரணி கரையின் பல்வேறு இடங்களில் பரிசல்துறைகள் இருந்திருக்கின்றன.

திருநெல்வேலி- பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை அந்த காலத்தில் பிரித்திருந்த ஆற்றை கடக்கவும் பரிசல்களையே மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த பரிசல்துறையில் உருவாக்கப்பட்டது தான், தற்போதைய சுலோச்சனா முதலி யார் பாலம். ஆற்றை கடக்க மக்கள் சிரமப்படுவதை பார்த்த ஃபேபர் என்ற ஆங்கிலேயரின் எண்ணத்தில் பாலம் கட்டும் திட்டம் உதயமானது.

ரூ.50 ஆயிரம் நன்கொடை

அக்காலகட்டத்தில் திருநெல் வேலி ஆட்சியரகத்தில் சிரஸ்தார் வேலையில் சுலோச்சனா முதலியார் இருந்தார். அவருக்கு லண்டன் லாட்டரியில் பரிசுத் தொகை கிடைத்ததை அடுத்து, அதிலிருந்து ரூ.50 ஆயிரத்தை பாலம் கட்டுவதற்கு தனிப்பட்ட நபராக அளித்தார். இந்த பாலத்தை ஆங்கிலேய பொறியாளர் டபிள்யூ.எச். ஹார்ஸ்லே என்பவர் கட்டினார். பாலம் கட்டுமான பணிகள் 1843-ல் முடிவுற்று போக்கு வரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.

பாலம் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய சுலோச்சனா முதலியார் பெயரே பாலத்துக்கு சூட்டப்பட்டது. இந்நிலையில் 1869-1871-ம் ஆண்டுகளில் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் சேதமடைந்தது. இதையடுத்து 1871-ல் பாலத்தை புனரமைப்பு செய்வதற்காக மக்களிடம் நன்கொடை பெற்று பணிகளை மேற்கொண்டார் ஃபேபர். மக்களின் நன்கொடையில் பாலத் தின் நான்கு கண்வாய்கள் மறுபடியும் கட்டப்பட்டன.

ரூ.18 கோடியில் புதிய பாலம்

ஆதியில் அமைக்கப்பட்ட சுலோச்சனா முதலியார் பாலம் குறுகியதாக இருந்தது. போக்கு வரத்து ஸ்தம்பித்தது. இதனால் பாலத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுலோச்சனா முதலியார் பாலம் 1966-ல் அகலப்படுத்தும் முன் 60 அடி கொண்ட 11 வளைவுகளுடன் இருந்தது. பாலத்தின் நீளம் 750 அடி, அகலம் 21 அடியாக இருந்தது. பழைய பாலம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின் 40 அடி அகலமுள்ளதாகவும், இருபுறமும் நடைபாதைக்கு 5 அடி பாதையுமாக மொத்தம் 50 அடி அகலம் கொண்டதாக அமைந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட பாலத்தை 10.1.1967-ல் அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் திறந்து வைத்தார்.

இப்போதும் இப்பாலம் திருநெல்வேலி- பாளையங் கோட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இதன் அருகே தற்போது ரூ.18 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது.

தனி மனித கொடையால் உருவான சுலோச்சனா முதலியார் பாலத்துக்கு இன்று 177-வது பிறந்த நாள். ஆண்டுதோறும் தன்னார்வலர்களால் இந்த தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவை அரசே நடத்தி சுலோச்சனா முதலியாரை பெருமைப்படுத்த வேண்டும். வருங்கால சந்ததியர் இந்த கொடையாளரின் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

மராமத்து செய்ய வேண்டும்

மாமனிதர் தனிக் கொடையாளி சுலோச்சனா முதலியார் பாலம் புகழ் போற்றும் நலக் குழுவைச் சேர்ந்த கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன் கூறும்போது, “சுலோச்சனா முதலியார் பாலத்துக்கு 177 -வது பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று மாலை 5.15 மணிக்கு கொக்கிரகுளம் பாலத்தின் முகப்பில் நடைபெறவுள்ளது. சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது எவ்வாறு என்பது குறித்த குறிப்புகளை எழுதி பாலத்தின் அருகே விளம்பர பலகை வைக்க வேண்டும். சேதமடைந்து வரும் இப்பாலத்தை மராமத்து செய்ய வேண்டும். நாங்கள் நடத்தும் விழாவை அரசே நடத்தினால் சுலோச்சனா முதலியாரின் பெருமைகளை அனைவரும் அறிய வாய்ப்பு உருவாகும்” என்றார் அவர்.

- அ. அருள்தாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x