Published : 27 Nov 2019 11:22 AM
Last Updated : 27 Nov 2019 11:22 AM

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு தையல் போடும் துப்புரவு பணியாளர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில், விபத்தில் காயம் அடைந்தவருக்கு துப்புரவுப் பணியாளர் தையல் போடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் காயம் அடைந்த இளைஞர் ஒருவருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் காக்கி உடை அணிந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் தையல் போடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மருத்துவர்கள், செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலையை துப்புரவுப் பணியாளர் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விசாரித்தபோது, கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூரைச் சேர்ந்த ஆர்.கார்த்தீபன்(38), நேற்று முன்தினம் பெரியாளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கிருந்த துப்புரவுப் பணியாளரே தையல் போட்டது தெரியவந்தது.

அவசர, அவசியம் கருதி துப்புரவுத் தொழிலாளி தையல் போட்டிருந்தாலும், அம்மருத்துவமனையில் உரிய பணியாளர்கள் இல்லாததும், இத்தகைய செயலை அனுமதிக்கும் மருத்துவ அலுவலர்களின் அலட்சியமும் கடும் கண்டனத்துக்கு உரியது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து துறைரீதியிலான விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இத்தகைய செயலை அனுமதிக்கும் மருத்துவ அலுவலர்களின் அலட்சியமும் கடும் கண்டனத்துக்கு உரியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x