Published : 27 Nov 2019 10:54 AM
Last Updated : 27 Nov 2019 10:54 AM

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண்ணுக்குள் புதைந்த தண்டவாளங்கள் சீரமைப்பு: துண்டிக்கப்பட்ட இருப்பு பாதைகள் மாற்றம்

சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில், மண்ணுக்குள் புதைந்த தண்டவாளங்கள் சீரமைப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்ற னர். இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைபட்டு வருகிறது.

23 இடங்களில் மண் சரிவு

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், கடந்த 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில், மீண்டும் பெய்த கன மழையால் கல்லாறு - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில், சுமார் 23 இடங்களில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், 24-ம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனாலும், பல இடங்களில் ஏற்பட்ட பலத்த மண் சரிவு மற்றும் ரயிலின் இருப்பு பாதை மீது கிடந்த பெரிய பாறைகளால் சீரமைப்பு பணிகள் தாமதமாகி, வரும் 29-ம் தேதி தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.


புதிய தண்டவாளம் பொருத்தப்படுகிறது

ராட்சத பாறைகள்

அடர்ந்த மலைக்காட்டின் நடுவே ரயில் பாதையின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை, ரயில்வே ஊழியர்கள் வெடி வைத்து தகர்த்தனர். பெரும் சத்தத்துடன் பாறைகள் வெடித்து சிதறி, சிறிய பாறைகளாக மாறிய பின்னர் அவற்றை ரயில்வே ஊழியர்கள் கயிறுகள் கட்டி இழுத்து அப்புறப்படுத்தினர்.

மேலும், மண்ணுக்குள் புதைந்துபோன இருப்புப் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத பாறைகள் மேலிருந்து உருண்டு விழுந்ததால், பல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்கள் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுக் கிடந்தன. இவற்றை மாற்றி, புதிய தண்டவாளங்களை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பாதியில் முடியும் பயணம்

இப்பணிகளை, வன விலங்குகள் நடமாட்டம் உள்ள, பனி சூழ்ந்த காட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மழைக்காலங்களில் திடீரென மலை ரயில் பாதையில் சரிவுகள் ஏற்பட்டு, பயணம் பாதியில் முடிவடைவதால், சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் நடுக்காட்டில் சிக்கித் தவிக்கும் நிகழ்வு தொடர்கிறது. மேலும், மண் சரிவு சீரமைப்புப் பணிகள் முடிவடையும் வரை, மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதால், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளும் ஏமாற்றமடைகின்ற னர்.

இதைத் தவிர்க்க, கோடை காலத்திலேயே மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மழைநீர் வடிகால்களை ஏற்படுத்தினால் மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவுகளை குறைக்கலாம் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x