Last Updated : 27 Nov, 2019 10:48 AM

 

Published : 27 Nov 2019 10:48 AM
Last Updated : 27 Nov 2019 10:48 AM

இறந்துபோன கோயில் காளைக்கு கரகாட்டம், ஒயிலாட்டம், மேள, தாளங்களுடன் இறுதிச் சடங்கு செய்த கிராம மக்கள்: ராமநாதபுரத்தில் வினோதம்

இறந்த அழகர்மலையான் கோயில் காளையை, மரியாதையுடன் அடக்கம் செய்த உடையநாதபுரம் கிராம மக்கள்.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோயில் காளை இறந்ததையடுத்து, கிராம மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், மேள, தாளங்களுடன் மரியாதை செலுத்தி கண்ணீர் மல்க அடக்கம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உடையநாதபுரத்தில், 23 வயதுடைய அழகர்மலையான் என்ற கோயில் காளையை, அக்கிராமத்தினர் தங்களது குலதெய்வமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, வளர்த்து வழிபட்டு வந்தனர்.

இந்த கோயில் காளையான அழகர்மலையான் வயது முதிர்வு காரணமாக, திங்கள்கிழமை மாலை இறந்தது. இதனால் உடையநாதபுரம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதனையடுத்து கிராமத்தினர் ஒன்று கூடி இறந்த கோயில் காளை முன்பாக அன்றிரவு முதல் கண்ணீர் மல்க, காளைக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து, மேள, தாளங்கள் முழங்க அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் நேற்று வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து உடையநாதபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் கூறும்போது, உடையநாதபுரம் கிராம மக்களுக்கு குல தெய்வமான அழகர்மலையான் காளை இறந்ததால், கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதன்காரணமாக தங்களது குடும்பத்தில் ஒருவர் இறந்ததுபோல் துக்கம் அடைந்தனர். மேலும் கோயில் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

கிராம மக்கள் ஒன்று கூடி, காணிக்கையாக பெற்ற பணத்தை வைத்து கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கை மேள, தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x