Published : 27 Nov 2019 11:09 AM
Last Updated : 27 Nov 2019 11:09 AM

மாற்றுத்திறனாளி மகளை 18 ஆண்டாக சுமக்கும் தாய்: உதவித் தொகை, மோட்டார் சைக்கிள் வழங்க பரிந்துரை

உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளி மகளை 18 ஆண்டுகளாக இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார் தாய் ஒருவர். அந்த மாணவிக்கு உதவித் தொகையும், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு சரவணன் என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். பிறக்கும் போதே இரு கால்களும் ஊனமான நிலையில் பிறந்தார் திவ்யா. அவருக்கு இப்போது 18 வயது ஆகிறது. இடையில் பத்மாவதியும், சரவணனும் பிரிந்துவிட்டனர். பத்மாவதி கூலி வேலைக்குச் சென்று தனது மகளை வளர்த்து வருகிறார்.

தொடக்கக் கல்வியை தனது ஊரில் கற்ற திவ்யா, தற்போது உத்திரமேரூர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். கல்வியில் சிறந்த விளங்கும் திவ்யாவை அவரது தாயார் பத்மாவதி தற்போதும் தங்கள் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தூரம் இடுப்பில் சுமந்தபடி சென்று அரசுப் பேருந்தை பிடித்து உத்திரமேரூருக்கு அழைத்து வருகிறார். மகளுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்துவிட்டு மீண்டும் மாலையில் மகளை தூக்கிக் கொண்டு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து வீட்டுக்குச் செல்கிறார். இதனால் கூலி வேலைக்கும் பத்மாவதியால் சரியாக செல்ல முடியவில்லை.

இது தொடர்பான தகவல் வருவாய் துறைக்கும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு துறைகள் மூலம் சில உதவிகள் வழங்க முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் வட்டாட்சியர் பவானியிடம் கேட்ட போது, “மாணவி திவ்யாவுக்கு ஏற்கெனவே மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கும் உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப் பட்டுவிட்டது. மாற்றுத்திறனாளி கள் அலுவலகம் மூலம் அவருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப் பட்ட மோட்டார் சைக்கிள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x