

ஐசிஎப்-பில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்த 5 ஆயிரம் பேருக்கு படிப்படியாக வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள இருப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎப்) கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து தொழில் பழகுனர் பயிற்சி (apprenticeship) பெற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை வேலை வழங்கப்படவில்லை. தேவையான பணியாளர்கள் அனைவரும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஏற்கெனவே தொழில் பழகுனர் பயிற்சி பெற்றவர்களை நியமித்தால் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
இப்போது கடைபிடிக்கும் தவறான அணுகுமுறையால் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கு வேலை என்ற மரபுக்கும் எதிரானது.
எனவே, சென்னை இருப்புப் பெட்டித் தொழிற்சாலையில் தொழில் பழகுனர் பயிற்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கும் படிப்படியாக வேலை வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.