மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.27) வெளியிட்ட அறிக்கையில், "மீனவர்கள் மீன்பிடித் தொழிலை லாபகரமாகச் செய்திட மத்திய, மாநில அரசுகள் உதவிகரமாக இருக்க வேண்டும். குறிப்பாக மீனவர்கள் படகுகளுக்கு டீசல் நிரப்பும் போது டீசலுக்குரிய மானியத்தொகையைக் கழித்து விட்டு மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய் என்றால் அதற்குண்டான மானியத் தொகையான ரூ.15-ஐக் கழித்து விட்டு மீதமுள்ள 50 ரூபாயைச் செலுத்தினால் போதும்.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்த முயற்சிக்கிறது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்ப முழு பணத்தையும் மீனவர்களே செலுத்த வேண்டும். அதன் பிறகு டீசலுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத் தொகையானது மீனவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால் மீனவர்கள் பொருளாதாரத்தில் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

எனவே ஏற்கெனவே நடைமுறையில் இருப்பது போல படகுகளுக்கு டீசல் நிரப்பும் போதே டீசலுக்கான மொத்த பணத்தில் மானியத் தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள பணத்தைச் செலுத்தும் முறையைத் தொடர வேண்டும் எனவும் ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தக்கூடாது எனவும் மீனவ சமுதாயம் கோரிக்கை வைக்கின்றது.

அது மட்டுமல்ல அரசாங்கம் மீனவர்களுக்கு மானியம், நிவாரணம் ஏதேனும் கொடுக்க வேண்டும் என்றால் அதுவும் உரிய நேரத்தில் சரியாக முறையாக கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

படகு சேதமடைந்தால், பழுதடைந்தால், உடைந்துவிட்டால், மீன்பிடிக்கச் செல்லும்போது இறந்து விட்டால் அரசின் நிவாரண உதவி காலத்தே கிடைக்க வேண்டும் என்பதுதான் மீனவர்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் மீனவர்கள் நலன் காக்க அவர்களுக்கென்று வங்கி தொடங்கி அதன் மூலம் படகுகளுக்கு டீசல் நிரப்பவும், மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

மீன்பிடித் தடைக்காலம், புயல், கடும் மழை ஆகியவற்றால் ஆண்டுக்கு மிக குறைந்த நாட்களே மீன்பிடிக்கச் செல்லக்கூடிய நிலையும் மற்றும் அண்டை நாட்டின் கடற்படையினரால் ஏற்படும் பாதிப்பாலும் மீன்பிடித் தொழிலில் கிடைக்கின்ற வருமானம் மீன்பிடித் தொழில் செய்யவே போதுமானதாக இல்லை. இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in