

வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி நாளை (நவ.28) தொடங்கி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என சுதந்திர தின விழா உரையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் 1797.92 சதுர கி.மீட்டர் பரப்பளவுடன் 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகை கொண்டது. திருப்பத்தூர், வாணியம்பாடி வருவாய் கோட்டங்களுடன் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் வருவாய் வட்டங்கள், 15 வருவாய் உள்வட்டங்கள் 195 வருவாய் கிராமங்கள், 207 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் 2234.32 சதுர கி.மீட்டர் பரப்பளவுடன் 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 மக்கள் தொகை கொண்டது. ராணிப்பேட்டை, அரக்கோணம் வருவாய் கோட்டங்களுடன் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் வருவாய் வட்டங்கள், 18 வருவாய் உள்வட்டங்கள், 330 வருவாய் கிராமங்களுடன் 288 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டமும் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா, திருப்பத்தூர் டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. 2 புதிய மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.