

தமிழகம் அறிவுசார் மக்களின் முனையமாக திகழ்கிறது என அரசியல் சாசன சட்ட தினவிழா மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி புகழாரம் சூட்டினார்.
இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவ.26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழா மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் 865 இளம் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் நிகழ்ச்சி உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடந்தது. பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார். இளம் வழக்கறிஞர்கள் பதிவு கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கே.பாலு நிர்வாக உறுதிமொழி வாசித்தார். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமை வகித்தார்.
விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நீதிபதிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர் கள் அரசியல் சாசன உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசியதாவது:
தமிழகம் அறிவுசார் மக்களின் முனையமாக திகழ்கிறது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த சட்ட வல்லுநர் களை இந்த மாநிலம் நாட்டுக்கு தந்துள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் அரசியல் சாசனம் அனைத்து சட்டங்களுக்கும் தாயாக உள்ளது. அரசியல் சாசனம் பகவத் கீதையைப் போன்றது. அது உங்க ளுக்கு பல விஷயங்களைக் கற்றுத் தரும். உலகிலேயே மிகப்பெரிய அரசியல் சாசனமும் நம்முடையது தான்.
வழக்கறிஞர் தொழில் என்பது ஆரம்பத்தில் போராட்டங்களும், அதிருப்தியும் நிறைந்தது. அதைக் கண்டு அஞ்சிவிடாமல் அதை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதேநேரம் ஆழ்ந்த சட்ட அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக பணி யாற்றினால் மனதுக்கு திருப்தி கிடைப் பதுடன் புத்தருக்கு கிடைத்தது போன்ற ஞானத்தையும் கூடுதலாக பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதி என்.கிருபாகரன் பேசும் போது, “சமீப காலங்களில் தமிழகத் தில் உரிமைகள் கொண்டாடப்பட்டும், கடமைகள் மறக்கப்பட்டும் வரு கின்றன. பணிபுரிவதில் இருந்த ஆர்வம் குறைந்து மக்கள் போராட் டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவது வேதனைக்குரியது. சமூகத் தில் எங்கெங்கு எதிர்வினை உருவா கிறதோ அங்கு வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. படித்துப் பெற்ற இந்த சட்ட அறிவை பொது நலனுக்காக உபயோகிக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சிலர் தங்களை தற்காத்துக் கொள்ள வழக்கறிஞர்களாகி விடு கின்றனர். அதுபோன்ற சூழல் இனி உருவாகக்கூடாது” என்றார்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசும் போது, “வழக்கறிஞர்கள் என்றாலே மக்கள் ஒருவித அதிருப்தியில் உள்ளனர். அந்த நிலை மாற வேண்டும். திறமையான வழக்கறிஞர் களாக நீங்கள் உருவெடுக்க வேண்டும்” என்றார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும் போது, “சட்டத்தின் ஆட்சி முடிந்து விட்டால் கலகம் உருவாகி விடும். பொதுவாக வழக்கறிஞர்கள் நல்ல குணாதிசயங்களை வளர்த்து சட்ட அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், அப்துல் குத்தூஸ், அகில இந்திய பார் கவுன் சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஆர்.விடுதலை, ஜெ.பிரிஸில்லா பாண்டியன், ஜி.மோகனகிருஷ்ணன், பி.அசோக் உட்பட பலர் பங்கேற்ற னர். தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.